WPL 2023: டெத் ஓவர்களில் விளாசிய ஷிகா-ராதா! இலக்கை விரட்டி பிடிக்குமா மும்பை?
Mar 26, 2023, 09:09 PM IST
MIW vs DCW: டெல்லி கேபிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று பைனலில் விளையாடி வருகிறது.
முதலில் விளையாடிய டெல்லி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் மும்பை இந்தியன்ஸ் முதல் மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியின் சாம்பியன் ஆகும்.
மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த டெல்லி கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து, முதலில் ஷஃபாலி வர்மாவும், மெக் லேனிங்கும் களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2வது ஓவரில் வோங் வீசிய ஃபுல் டாஸ் பந்தை தூக்கி அடித்து கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் ஷஃபாலி வர்மா.
நோ பாலாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதி மெக் லேனிங் நடுவரிடம் முறையிட்டார். இதையடுத்து, மூன்றாவது நடுவரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. வீடியோவில் ரீப்ளே செய்து பார்த்த மூன்றாவது நடுவர் அவுட் என அறிவித்தார்.
இதையடுத்து, களம் புகுந்த அலைன் கேப்சி டக் அவுட்டாகி டெல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
மறுமுனையில் நம்பிக்கையுடன் விளையாடி வந்தார் மெக் லேனிங்.
ஒருகட்டத்தில் களமிறங்கிய வீராங்கனைகள் ஒன்றன் பின் ஒன்றாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் மெக் லேனிங்கும் 35 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார்.
இதனால், டெல்லி அணி மூன்றிலக்க ஸ்கோரை எட்டுவதற்கே தடுமாறியது.
மெல்லி கெர் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வோங் 3 விக்கெட்டுகளையும், ஹேலே மேத்யூஸ் 3 விக்கெட்டையும் கைப்பற்றினார். டபிள்யூபிஎல் போட்டியில் 10 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டெத் ஓவர்களில் ஷிகா பாண்டே நின்று விளையாடினார். பவுண்டரிகள், சிக்ஸ் என பறக்க விட்டு டெல்லியின் ஸ்கோரை 100 ஐ கடக்க உதவினார்.
மறுபக்கம் ராதா யாதவும் சிறப்பாக விளையாடினார். கடைசி வரை நின்று விளையாடிய இருவரும், பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் விளாசி அசத்தினார்.
ஷிகா பாண்டே 17 பந்துகளில் 27 ரன்களையும், ராதா யாதவ் 12 பந்துகளில் 27 ரன்களையும் விளாசினர்.
இவ்வாறாக 20 ஓவர்களில் 131 ரன்களை சேர்த்தது டெல்லி.
முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இஷான் கிஷன் ஆகியோர் wpl பைனலைக் காண மும்பை ஸ்டேடியத்திற்கு வந்தனர்.
டாபிக்ஸ்