Womens Asia cup 2022: 7வது முறையாக சாம்பியன்! சாதித்த இந்திய மகளிர் அணி
Oct 15, 2022, 11:54 PM IST
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் எளிதாக இலங்கையை வென்று 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய ஏழு அணிகள் தொடரில் பங்கேற்றன. இதில் லீக் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியை தழுவியது இந்திய மகளிர் அணி.
இதேபோல் பாகிஸ்தான் மகளிர் அணியும் ஒரேயொரு தோல்வியை பெற்ற நிலையில், அரையிறுதியில் இலங்கையிடம் வீழ்ந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்தியா அணி அரையிறுதியில் தாய்லாந்து அணியை வெற்றி கண்டு இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.
இதையடுத்து இன்று சில்ஹெட் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை மகளிர் அணிகள் மோதின.
முதலில் பந்து வீசிய இந்தியா அணி அற்புதமாக பெளலிங் செய்து இலங்கை அணியை ரன் குவிப்பில் ஈடுபடவிடாமல் கட்டுப்படுத்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 65 ரன்கள் மட்டுமே இலங்கை எடுத்தது.
இந்திய பெளலரான ரேணுகா சிங் அற்புதமாக பந்து வீசினார். 3 ஓவர்கள் வீசி வெறும் 5 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரைத்தொடர்ந்து ராஜேஸ்வரி கெய்வாட், ஸ்நேக் ராணா ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 66 ரன்கள் என மிகவும் எளிதான இலக்கை விரட்டிய இந்தியா அணி 8.3 ஓவரில் 2 விக்கெட்டு இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து, ஆசிய கோப்பையை ஏழாவது முறையாக வென்றது.
இந்த குறைவான ஸ்கோரை சேஸ் செய்கையில், இந்திய மகளிர் அணியின் விரேந்தர் சேவாக் என்று அழைக்கப்படும் ஸ்மிருத்தி மந்தனா அதிரடியாக பேட் செய்து 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து ஆட்டநாயகி விருதை ரேணுகா சிங், தொடர் நாயகி விருதை தீப்தி ஷர்மா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் மகளிர் ஆசிய கோப்பையை இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பெற்றார்.
இதுவரை 8 முறை மகளிர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றுள்ள நிலையிஸ் ஏழு முறை இந்தியா சாம்பியன் ஆகியுள்ளது. ஒரு முறை இரண்டாவது இடத்தை பிடித்தது. மகளிர் ஆசிய கோப்பை அனைத்து தொடர்களின் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாடியுள்ளது.