The Women's Ashes: இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் கவனம் ஈர்க்கும் புதுமுகம்!
Jun 23, 2023, 03:37 PM IST
England vs Australia: முதல் போட்டியே வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டமாக அமைந்ததால் ஆனந்தத்தில் உள்ளார் லாரன்.
மகளிர் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
ஆஸ்திரேலிய மகளிர் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய ஆஸி., வீராங்கனைகள் பெத் மூனி 33 ரன்களையும் லிட்ச்ஃபீல்டு 23 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
எல்லீஸ் பெர்ரி 99 ரன்களை எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டார்.
மறுபக்கம் டஹிலா மெக்ராத் 61 ரன்கள் விளாசி எக்லெஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆஷ்லீ கார்ட்னர் 40 ரன்களில் நடையைக் கட்ட, அன்னபெல் சதர்லேண்ட் 39 ரன்களுடனும், அலானா கிங் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
முதல் நாள் முடிவில் 85 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்களை ஆஸ்திரேலியா மகளிர் அணி எடுத்தது.
நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியில் அறிமுகமான லாரன் ஃபைலர் 14 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முதல் போட்டியே வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டமாக அமைந்ததால் ஆனந்தத்தில் உள்ளார் லாரன்.
பெத் மூனி மற்றும் எலிஸ் பெர்ரி ஆகியோரின் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து அறிமுக வீராங்கனை லாரன் ஃபைலர் தனது முதல் ஆட்டத்திலேயே இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
"நான் எனது முதல் பந்தை பீல்டிங் செய்தவுடன் கொஞ்சம் நிதானமாக இருந்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் நிச்சயமாக ஆரம்பத்தில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. இது ஒரு சிறந்த தொடக்கம், அதைத்தான் நானும் செய்ய விரும்புகிறேன், எனவே நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு நம்ப முடியாத அனுபவம்.
ஆனால் நேற்றைய தினம் ஒரு நல்ல நாளாக அமைந்தது"என்றார்.
யார் இந்த லாரன்?
லாரன் லூயிஸ் ஃபைலர் 2000வது ஆண்டு டிசம்பர் 22 அன்று பிறந்தார். இவர் தற்போது சோமர்செட் மற்றும் வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணிகளுக்காக விளையாடுகிறார். அவர் வலது கையில் பந்துவீசும் திறன் படைத்தவராக இருக்கிறார். இவர் இதற்கு முன்பு வெல்ஷ் ஃபயர் அணிக்காக விளையாடியுள்ளார்.
டாபிக்ஸ்