Asia cup 2022: ஆசியக் கோப்பையை வெல்லுமா இந்தியா?
Aug 29, 2022, 11:54 AM IST
ஆசியக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்றுள்ள இந்தியாவுக்கு இந்தமுறை கோப்பையைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதா என்று ரசிகர்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது.
துபை: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று தொடங்கியது. இந்த முறை ஆசியக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால் எட்டாவது முறையாகும்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 15வது சீசன் 'டி-20' தொடராக ஐக்கிய அமீரகத்தில் 27ஆம் தேதியன்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
ஆசிய கோப்பை தொடரில் இதுவரை ஏழு முறை கோப்பையை இந்திய அணி வென்றது 'நடப்பு சாம்பியன்' இந்தியா. தற்போது எட்டாவது முறையாக சாதிக்க வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு அணிகளும், தங்களது உலகக் கோப்பை (அக்ஸ்ட் 16 - நவம்பர் 13, ஆஸ்திரேலியாவில் நடக்கிறது) அணியை முடிவு செய்ய இத்தொடர் உதவியாக இருப்பது உறுதி.
தவிர செப்டம்பர் 15ஆம் தேதியன்று உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. இது இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியை தந்துள்ளது. கேப்டன் ரோகித்துடன் இணைந்து துவக்கம் தர லோகேஷ் ராகுல் உள்ளார். கோஹ்லி ரன் மழை பொழிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, சூர்யகுமார், ஜடேஜா தங்கள் பங்கை சிறப்பாக செய்யலாம். பவுலிங்கில் பும்ரா, ஹர்ஷல் படேல் இல்லாத நிலையில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சுழலில் அஷ்வின், ஜடேஜா, சகால் சாதிக்கலாம். இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று வீழ்த்தியது.
கடந்த 12 மாதங்களாக பாகிஸ்தான் அணி, சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடைசியாக 10 ஆண்டுக்கு முன் ஆசிய கோப்பை வென்றது. இம்முறை வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிதி இல்லாதது பலவீனம். முகமது வாசிம் முதுகு பகுதி காயத்தால் அவதிப்படுவது சிக்கல் தரலாம். முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆசம், பகர் ஜமானை அதிகம் நம்பியுள்ளது. பயிற்சியாளர் சில்வர்உட் தலைமையில் இலங்கை அணி நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. கேப்டன் ஷனாகா, குணதிலகா, நிசாங்கா, அசலங்கா, பானுகா, ஹசரங்கா என அணியில் திறமைக்கு பஞ்சமில்லை.
கடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்குப் பின் வங்கதேச அணி சர்வதேச அரங்கில் தொடர்ந்து திணறி வருகிறது. சாகிப் அல் ஹசன் தலைமையில் மீண்டு வர முயற்சிக்கிறது. தொழில்நுட்ப இயக்குனராக நியமிக்கப்பட்ட முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் உதவ காத்திருக்கிறார்.
முகமது நபி கேப்டனாக உள்ள ஆப்கானிஸ்தான் அணி, குறைந்தபட்சம் 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேற முயற்சிக்கும். முன்னணி 'சுழல்' பவுலர் ரஷித் கான் அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார். தவிர ஹாங்காங் அணி, நான்காவது முறையாக ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கியுள்ளது. இன்று நடக்கும் முதல் மோதலில் இலங்கை, ஆப்கானிஸ்தான் ('பி' பிரிவு) மோதுகின்றன.
ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை இந்திய அணி அதிகபட்சமாக 7 முறை (1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதனையடுத்து இலங்கை 5 (1986, 1997, 2004, 2008, 2014), பாகிஸ்தான் 2 (2000, 2012) அணிகள் மட்டுமே கோப்பை வென்றுள்ளன.
* வங்கதேச அணி 3 முறை (2012, 2016, 2018) பைனல் வரை சென்றது.
* ஆப்கானிஸ்தான் ஒரு முறை (2018) 'சூப்பர்-4' சுற்று வரை சென்றது.
* ஐக்கிய அமீரகம் (2004, 2008, 2016), ஹாங்காங் (2004, 2008, 2018) அணிகள் தலா 3 முறை லீக் சுற்றோடு திரும்பின.
* ஓமன், நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், குவைத் அணிகள் ஒரு முறை கூட பிரதான சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
டாபிக்ஸ்