IND vs WI 2nd ODI Preview: 'இந்த ஆட்டத்திலும் ஜெயிச்சா கோப்பை நமக்கு தான் மாறா'-தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா
Jul 29, 2023, 07:10 AM IST
முதல் ஆட்டத்தில் பெரிய பரபரப்பு இல்லாமல் சட்டென்று தொடங்கிய வேகத்தில் முடிந்தது. ஒரு காலத்தில் ஜாம்பவனாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியா இப்படி விளையாடுகிறது என யோசிக்க வைத்தது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, பார்படாஸில் இந்திய நேரப்படி இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஈஸியாக வெஸ்ட் இண்டீஸை சாய்த்தது இந்தியா.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பார்படாஸில் நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 114 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய இந்தியா இலக்கை எட்டி வெற்றி கண்டது.
எட்டிப்பிடிக்க குறைவான இலக்கே இருந்தாலும், போராடி தான் இலக்கை எட்டியது இந்திய அணி. 4வது ஒரு நாள் அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார் இஷான் கிஷன்.
பந்துவீச்சில் ஜடேஜா, குல்தீப் யாதவ் கலக்கினர். முகேஷ் குமார், ஷர்துல் தாக்குர், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கும் 1 விக்கெட் கிடைத்தது.
வேகப்பந்து வீச்சை காட்டிலும் சுழலுக்கு பார்படாஸ் மைதானம் அதிகம் ஒத்துழைத்ததை இந்தியா விளையாடியபோதிலும் பார்க்க முடிந்தது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸுக்கு சுழல்பந்து வீச்சு கைமேல் பலன் கொடுத்தது.
இன்றைய ஆட்டத்திலும் அதுவே தொடரும் என எதிர்பார்க்கலாம். இதனால், வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரை குறைத்து சுழல்பந்து வீச்சாளரைக் கூடி களமிறக்க இரு அணிகளும் முடிவு செய்ய வாய்ப்புள்ளது.
முதல் ஆட்டத்தில் பெரிய பரபரப்பு இல்லாமல் சட்டென்று தொடங்கிய வேகத்தில் முடிந்தது. ஒரு காலத்தில் ஜாம்பவனாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியா இது என யோசிக்க வைத்தது.
ஆனால் கிரிக்கெட் என்பது நிலைத்தன்மையற்றது ஆயிற்றே. அதனால், எந்த ஆட்டத்திலும் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்பதால், இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடனே ஒவ்வொரு போட்டியையும் அணுக வேண்டும். அந்த வகையில் இன்றைய ஒரு நாள் ஆட்டத்தை இந்தியா கவனத்துடன் கணித்து விளையாடி ஜெயித்தால் தொடரை கைப்பற்றிவிடும்.
டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் ஏற்கனவே இந்திய அணி இந்தச் சுற்றுப்பயணத்தில் கைப்பற்றியிருக்கிறது. தற்போது 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரிலும் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இன்றைய ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் வென்றால் தொடரைக் கைப்பற்றிவிடும்.
டாபிக்ஸ்