Ultimate Kho Kho: சென்னை குயிக் கன்ஸ் உள்பட 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி
Jan 10, 2024, 11:30 AM IST
முதலாவது ஆட்டம் இரவு 7.30 மணிக்கும், இரண்டாவது அரையிறுதி இரவு 8.30 மணிக்கும் தொடங்குகிறது.
அல்டிமேட் கோ கோ சீசன் 2 போட்டியில் ஒடிஸா ஜக்கர்நட்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், சென்னை குயிக் கன்ஸ், தெலுங்கு யோத்தாஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
முன்னதாக, நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டங்களில் ஒடிஸா அணி 34-24 என்ற பாயிண்ட் கணக்கில் மும்பை கிலாடிஸை வீழ்த்தியது.
30வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை குயிக் கன்ஸ் அணி, 38-21 என்ற பாயிண்ட் கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸை வீழ்த்தியது. புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
அதன்படி, சென்னை குயிக் கன்ஸ் 10 போட்டிகளில் விளையாடி 7 இல் வெற்றியும், ஒரே ஒரு தோல்வியும் மட்டுமே கண்டது. 2 ஆட்டங்களை சமன் செய்தது. மொத்தம் 25 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
அடுத்த இடத்தில் 23 புள்ளிகளுடன் ஒடிஸா ஜக்கர்நட்ஸ் அணியும், 3வது இடத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 21 புள்ளிகளுடனும், தெலுங்கு யோத்தாஸ் 18 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளன.
இதன்மூலம், இந்த 4 அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதியில் ஒடிஸா-குஜராத் அணிகளும், 2வது அரையிறுதியில் சென்னை-தெலுங்கு யோத்தாஸ் அணிகளும் மோதுகின்றன.
முதலாவது ஆட்டம் இரவு 7.30 மணிக்கும், இரண்டாவது அரையிறுதி இரவு 8.30 மணிக்கும் தொடங்குகிறது.
இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
பைனல் ஜனவரி 13ம் தேதி நடைபெறும். அதேநாளில், அரையிறுதி போட்டியில் தோற்ற அணிகள் 3வது இடத்திற்கு மோதும்.
இந்தப் போட்டிகள் ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அல்டிமேட் கோ கோ, இந்தியாவின் முதல் தொழில்முறை Kho Kho லீக் ஆகும். அமித் பர்மன் அவர்களால் இந்திய Kho Kho Federation of India (KKFI) உடன் இணைந்து இந்த லீக் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விளையாட்டான கோ கோவை ஒரு தொழில்முறை கட்டமைப்பிற்குள் சந்தைப்படுத்துதல் மற்றும் தொகுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த லீக் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியானது இந்தியாவின் சொந்த உள்நாட்டு விளையாட்டை முன்னணிக்கு கொண்டு வருவதையும், இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டு லீக்காக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அல்டிமேட் கோ கோ லீக் பழமையான இந்திய விளையாட்டை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும், இளம் திறமையாளர்கள் தங்கள் திறமைகளை இந்தியா மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தவும் பாடுபடுகிறது.
டாபிக்ஸ்