போலியோ பாதிப்பை பின்னுக்கு தள்ளி தடகள உலகில் முன்னணி நட்சத்திரம்! மாற்றுத்திறன் கருப்பின பெண்ணின் உத்வேகமளிக்கும் கதை!
Jun 23, 2023, 06:40 AM IST
HBD Wilma Rudloph : ருடால்ஃப் குழந்தையாக இருந்தபோது அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்தது. நிமோனியா, ஸ்கார்லெட் காய்ச்சல், போலியோ என 5 வயதுக்குள்ளே கடுமையான பிரச்னைகளுக்கு ஆளானார். இவர் போலியோவில் இருத்து குணமடைந்தாலும், இடது காலின் பலத்தை இழந்தார்.
வில்மா ,குளோடீன் ரடால்ஃப், அமெரிக்க தடகள வீராங்கனை. குழந்தையாக இருந்தபோது ஏற்பட்ட போலியோ நோயை பின்னுக்குத்தள்ளி, 1956 மற்றும் 1960 ஒலிம்பிக் போட்டிகளில் இவரது சாதனை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை. 1956ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த கோடை ஒலிம்பிக் போட்டிகளில் 1X400 மீட்டர் ரிலேவில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
அடுத்ததாக 1960ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற கோடை ஒலிம்பிக்கில் 100, 200 மீட்டர் தனிநபர் பிரிவு மற்றும் 1X400 மீட்டர் ரிலே என 3 தங்கப்பதக்கங்களை வென்றார். வில்மா, உலகின் அதிவேக பெண்மணி என்று அழைக்கப்பட்டார். ஒரே ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்க பெண்மணி ஆவார்.
அப்போதுதான் உலகில் தொலைக்காட்சி பிரபலமாயிருந்தது. எனவே அந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் மூலம் சர்வதேச அளவில் அனைத்து மக்களையும் சென்றடைந்தது. இதனால் அவர் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றார். 1960களின் துவக்கத்தில் ஒரு ஒலிம்பிக் சாம்பியனாக, அமெரிக்காவில் இருந்த கருப்பின பெண்மணியான ருடால்ஃப் இருந்தார். இவர் கருப்பின பெண்களுக்கும், தடகளத்தில் சாதிக்க துடித்த பெண்களுக்கும் ரோல் மாடலாக இருந்தார்.
இவர் ஒரு வீராங்கனை மட்டுமல்ல குடியுரிமை மற்றும் பெண்ணுரிமை போராளிகளில் முன்னோடியாகவும் இருந்தார். 1962ம் ஆண்டு தனது விளையாட்டுகளில் உச்ச நட்சத்திரமாக இருந்து காலத்திலே அவர் ஓய்வு பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் தடகள பயிற்சியாளர் ஆனார்.
ருடால்ஃப் ஒரு குறைமாத குழந்தையாக 2 கிலோ எடையில் பிறந்தார். 1940ம் ஆண்டு ஜீன் 23ம் தேதி கிளார்க்வில்லில் பிறந்தார். இவரது குடும்பத்தில் இருந்த 22 குழந்தைகளில் 20வது குழந்தையாக பிறந்தார். அவரது தந்தை ஈத் ருடால்ஃப் இரண்டு மனைவிகள். ருடால்ஃபின் தந்தை ரயில்வேயில் போர்ட்டராகவும், பல கூலித்தொழில்களையும் செய்தார். தாய் பிலென்ச் வீடுகளில் உதவியாளராக இருந்தார்.
ருடால்ஃப் குழந்தையாக இருந்தபோது அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்தது. நிமோனியா, ஸ்கார்லெட் காய்ச்சல், போலியோ என 5 வயதுக்குள்ளே கடுமையான பிரச்னைகளுக்கு ஆளானார். இவர் போலியோவில் இருத்து குணமடைந்தாலும், இடது காலின் பலத்தை இழந்தார். இதனால் அவரது குழந்தைப்பருவத்தில் மாற்றுத்திறனாளியாக இருந்தார். 12 வயது வரை லெக் பிரேஸ் அணிந்திருந்தார்.
ஏனெனில் ஆப்பிரிக்கன் அமெரிக்கன் குடும்பத்தினருக்கு குறைவான அளவு வசதிகளே அந்த காலத்தில் கிடைத்தது. அவரது தாய் அவரை 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வாரம் ஒருமுறை அழைத்துச்சென்று சிகிச்சையளித்தார். அதற்காக அவர்கள் பஸ்சில் பயணம் செய்வார்கள். அவரது வீட்டில் இருந்தவர்களும் அவரின் கால்களை தினமும் 4 முறை மசாஜ் செய்வார்கள். அவர் வசிக்காக எலும்பியல் சிறப்பு ஷீ அணிந்துகொண்டார். கிளார்க்வில்லில் பள்ளி படிக்கும் காலத்திலே, தடகளமும், கூடைபந்தும் விளையாட துவங்கிவிட்டார்.
உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே அவர் கர்ப்பமடைந்து விட்டார். அவருக்கு யோலாண்டா என்ற குழந்தை பிறந்தது. பின்னர் அவர் கல்லூரியில் சேர்ந்தார். அங்கும் தடகளத்தை அவர் தொடர்ந்தார். அவர் வேலை செய்துகொண்டே படித்து பட்டமும் பெற்றார். பின்னர் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சாதித்து உலகப்புகழ் பெற்றார்.
பாக்ஸிங் முன்னணி வீரர் முகமது அலியுடன் டேட்டிங் சென்றார். இருமுறை இவருக்கு திருமணம் நடைபெற்று, இரண்டும் விவாகரத்தில் முடிவடைந்தது. பின்னர் 1994ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
கருப்பின மற்றும் மாற்றுத்திறன் பெண்களுக்கு இவரது வாழ்க்கை வரலாறு இன்றும் உத்வேகமாக இருந்து வருகிறது. இவர் ஒலிம்பிக் மட்டுமின்றி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். பெண்களின் விளையாட்டு விடுதிகளுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்