HT Sports Special: மித வேகத்தில் பேட்ஸ்மேன்களை ஆட்டம் காண வைத்தவர்! மறக்க முடியுமா பாகிஸ்தான் அணிக்கு இவர் கொடுத்த அடி
Aug 05, 2023, 05:45 AM IST
உலகக் கோப்பை என்றாலே பட்டென நினைவுக்கு வருவது தோனியின் சிக்ஸர் தான். ஆனால் அதற்கு முன்னதாக தன்னை ஸ்லெட்ஜ் செய்த ஆமிர் சோஹைலை அடுத்த பந்திலேயே போல்டாக்கி கர்மா இஸ் பூமராங் என்பதை பவுலிங்கில் நிருபித்து மறக்க முடியாத சம்பவத்தை செய்தவர் தான் வெங்கடேஷ் பிரசாத்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத்தின் உயரம் 6.3 அடி. 1990களில் இந்திய அணியில் உயரமான வீரர்களில் ஒருவராக இருந்த இவர் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார். இவரது தோற்றத்துக்கு ஏற்றார் போல் அசுரத்தனமாக வேகமும், பவுன்சரும் வீசக்கூடிய பவுலராக இல்லாமல் மிக நீண்ட ரன்அப்பில் இருந்து ஓடி வந்து சராசரியாக 130 கிமீ வேகத்தில் பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளும் பவுலராக இருந்தார்.
குறிப்பாக லெக்கட்டரில் வெங்கடேஷ் பிரசாத் வீசும் ஸ்லோ பந்துக்கு இணையாக இதுவரை வேறு எந்த பவுலரும் வீசியதில்லை என்ற உறுதியாக கூறலாம். பிரசாத்தின் ஸ்லோ பால் பெரும்பாலும் டாட் பாலாக மாறுவதோ அல்லது விக்கெட் டேக்கிங் பாலாக மாறியதுண்டு. அந்த அளவில் துல்லியமான லைன் மற்றும் லென்தில் ஸ்லோ பால் வீசக்கூடிய பவுலராக இருந்தார்.
இந்திய அணிக்காக 1994 முதல் 2001 வரை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் பல மறக்க முடியாத இன்னிங்ஸும் உள்ளன. இவரது பேவரிட் அணி பாகிஸ்தான் என கூறும் அளவுக்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்களை தனது அற்புத பவுலிங்கால் திணறடித்து விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். இதை டெஸ்ட், ஒரு நாள் என இரண்டு போட்டிகளிலும் செய்துள்ளார்.
உலகக் கோப்பை என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வரும் சம்பவமாக இருப்பது 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோனி அடித்த சிக்ஸரை பெரும்பாலோனர் கூறுவர்கள். மற்றொரு சம்பவமாக 1983 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விவன் ரிச்சர்ட்ஸ் விக்கெட்டை வீழ்த்த கபில் தேவ் ஓடிப்போய் பிடித்த ரிட்டர்ன் கேட்ச், அவர் உலகக் கோப்பையை பெறும்போது புன்னகை வெளிப்படுத்திய இன்னும் சில நிகழ்வுகளும் உள்ளன.
அந்த வரிசையில், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல், ஸ்லெட்ஜ் செய்த பாகிஸ்தான் கேப்டன் ஆமிர் சோஹைலை கிளீன் போல்டாக்கி வெங்கடேஷ் பிரசாத் செய்த இன்ஸ்டன்ட் பதிலடி இந்திய உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது.
1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், இந்தியா நிர்ணயித்த 288 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் அணி ரன்கள் குவித்துகொண்டிருக்க, ஆட்டத்தின் 14.5 ஓவரில் பவுண்டரி அடித்த ஆமிர் சோஹைல், அந்த ஓவரை வீசிய வெங்கடேஷ் பிரசாத்தை பார்த்து பந்தை போய் பவுண்டரியில் எடுக்குமாறு கையை தூக்கி மிரட்டல் தொனியில் செய்கை காட்டினார்.
இவரது இந்த செயலால் ஒட்டு மொத்த ஸ்டேடியமும் அமைதியில் திகைக்க, அடுத்த பந்திலேயே ஆஃப் ஸ்டம்ப் தெறிக்க ஆமிர் சோஹைலை கிளீன் போல்டாக்கினார் பிரசாத். இம்முறை பிரசாத் அவரை பார்த்து வெளியே போடா ஐயோக்கிய ராஸ்கல் என சொல்லி அமைதியான ஒட்டுமொத்த ஸ்டேடியத்தையும் மீண்டும் அலறவிட்டார். கர்மா இஸ் பூமராங் என்ற சொல்லுக்கு பெர்பெக்ட் உதாரணமாக அமைந்த இந்த சம்பவம் கிரிக்கெட் போட்டியின் சிறந்த இன்ஸ்டன்ட் பதிலடியாகவும், முக்கிய நிகழ்வாகவும் அமைந்தது. இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வெற்றி பெற முக்கிய காரணமாக பிரசாத் திகழ்ந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக வெங்கடேஷ் பிரசாத்தின் வேட்டை இத்துடன் முடியவில்லை. 1999இல் நீண்ட இடைவெளிக்ககு பிறகு இந்திய மண்ணில் பாகிஸ்தான் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 11 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான் அணி. இதில் 5 விக்கெட்டை வெங்கடேஷ் பிரசாத் வீழ்த்தியதுடன், அவரது அந்த ஸ்பெல் 0 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என அற்புதமாக அமைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பிரசாத் பவுலிங் பிகர் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் என இருந்தது.
வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணியில் பேட்டிங்குக்கு நன்கு சாதகமாக இருந்த பிட்சில் தனது அற்புத பவுலிங்கால் ஆட்டம் காண வைத்தார். இதே ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் சிக்ஸ் போட்டியில் இந்தியா மோதியது. இந்த போட்டியில் இந்தியா 227 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஆனால் பவுலிங்கில் தெறிக்கவிட்ட இந்திய பவுலர்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி அளித்தனர். ஓபனிங் பவுலிங் ஜோடியாக இருந்த ஸ்ரீநாத் - வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் தங்களது ஸ்பெலில், தலா 2 என 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த பிரசாத் 27 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்ததுடன், ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
பாகிஸ்தான் அணிக்கு சிம்மசொப்பணமாக திகழ்ந்த இவர், தென்ஆப்பரிக்கா அணிக்கு எதிராக 10 விக்கெட் எடுத்த போட்டி, இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக இருந்துள்ளார்.
அதேபோல் நைரோபியில் 2000ஆவது ஆண்டு நடைபெற்ற ஐசிசி நாக்அவுட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியில் கடைசி பந்து பேட் செய்ய வந்து இமாலய சிக்ஸர் அடித்து அணிக்கு சிறப்பாக பினிஷ் கொடுத்திருப்பார். இதுவும் பிரசாத் செய்த சம்பவங்களில் முக்கியமானதாக உள்ளது.
1996/97 சீசனில் 15 டெஸ்ட் போட்டிகளில் 55 விக்கெட், 30 ஒரு நாள் போட்டிகளில் 48 விக்கெட்டுகள் என கலக்கிய பிரசாத், ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டராக தேர்வு செய்யப்பட்டார். 2000ஆவது ஆண்டில் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கி இந்திய அரசாங்கம் கெளரவித்தது. 2001க்கு பிறகு காயம் மற்றும் மோசமான பார்ம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் கம்பேக் கொடுக்கவே இல்லை.
2005இல் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற பிரசாத், 2006இல் யு19 அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். இவரது பயிற்சி காலத்தில் இந்திய அணி ரன்னர் அப் ஆனது. இதைத்தொடர்ந்து முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்துள்ள பிரசாத், ஐபிஎல் முதல் சீசனில் ஆர்சிபி அணி தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என மொத்தம் 194 போட்டிகள் 292 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் சிறந்த பவுலர்கள் லிஸ்டில் ஒருவராக இருந்து வரும் வெங்கடேஷ் பிரசாத்துக்கு இன்று 54வது பிறந்தநாள்.
டாபிக்ஸ்