HT Sports Special: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக நிகழ்த்தப்பட்ட சாதனை! மாயாஜாலம் செய்த சுழல் மன்னன் வார்னே
Aug 11, 2023, 06:20 AM IST
18 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பவுலராக 600 விக்கெட் என்ற மைல்கல் சாதனையை இதே நாளில் தான் நிகழ்த்தினார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மறைந்த சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது வரை 600 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்களில் வார்னேவுக்கு அடுத்தபடியாக மூன்று பேர் மட்டுமே உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும், ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். முறையே மூன்று முதல் ஐந்தாவது இடம் வரை இங்கிலாந்தின் ஜேமி ஆண்டர்சன் 690 விக்கெட்டுகள், இந்தியாவின் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள், இங்கிலாந்திந் ஸ்டூவர்ட் பிராட் 604 விக்கெட்டுகள் என உள்ளனர்.
டாப் 5 இடங்களில் இருப்பவர்களில் ஸ்டூவர்ட் பிராட் மட்டும் தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரராக இருந்து வரும் நிலையில், அவர் வார்னேவை முந்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத ஒரு புறம் இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரே பவுலர் 600
விக்கெட்டுகள் என்ற மேஜிக் எண்களை அடைந்து உலகையை திரும்பி பார்க்க வைத்தது என்றால் அது ஷேன் வார்னே தான்.
2005ஆம் ஆண்டு ஆஷஷ் தொடரில் மான்சஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் மார்கஸ் ட்ரெஸ்கோதிக் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல் சாதனையை புரிந்தார் வார்னே. 1993ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த வார்னே 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய சாதனையை நிகழ்த்தினார்.
ஒரு நாள் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட வார்னே டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த சமயத்தில் உலகையே தன்னை திரும்பி பார்க்க வைத்தார். வார்னவின் இந்த 18 ஆண்டு கால சாதனைக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 ப்ளஸ் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் இதுவரை அவருடன் சேர்த்து மொத்தம் 5 பேர் மட்டுமே உள்ளனர்.
வார்னே 600வது விக்கெட் எடுத்த இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்த ஆட்டம் டிரா ஆனது. இந்த தொடரில் 5 போட்டிகளிலும் பங்கேற்ற வார்னே 40 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்தார்.
தனது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் 145 போட்டிகளில் பங்கேற்று 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதாவது 2005 ஆஷஷ் தொடருக்கு பின்னரும் கூடுதலாக 100 ப்ளஸ் விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை சாதனைகள் என்பது முறியடிக்கப்படுவதும், புதிதாக நிகழ்த்தப்படுவதும் தொடர்ச்சியாக நிகழும் நிகழ்வாகவே உள்ளது. ஆனால் முதல் ஆளாக நிகழ்த்தப்படும் ஒரு சாதனையானது வரலாற்றின் நிலைத்து நிற்பதுடன், அந்த வீரருக்கு மறக்க முடியாத சம்பவமாகவே அமைந்திருக்கும். அந்த வகையில் ஷேன் வார்னே என்ற நினைவுக்கு வரும் பல்வேறு விஷயங்களில் அவர் 600 விக்கெட் வீழ்த்திய இந்த நிகழ்வு டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை முக்கிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்