HT Sports Spl: நான்காவது முயற்சியில் சாதித்த இங்கிலாந்து! பல்வேறு சர்ச்சை, 'விதி'யால் முதல் முறை உலக சாம்பியன் ஆன கதை
Jul 14, 2023, 07:00 AM IST
உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற போதிலும் கோப்பையை மிஸ் செய்தது இங்கிலாந்து. ஆனால் நான்காவது முறை சொந்த மண்ணில் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியதுடன் விதியின் விளையாட்டால் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் முதல் முறையாக கோப்பையை தன் வசமாக்கியது.
கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த நாடு என்று கூறப்படும் இங்கிலாந்து, 45 ஆண்டு கால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் தங்கள் அணி மீதிருந்த கரும்புள்ளியை 2019ஆம் ஆண்டில் இதே நாளில்தான் துடைத்தெறிந்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 1979, 1987, 1992 என மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றபோதிலும் கோப்பை தன் வசமாக்க முடியாமல் தவித்தது வந்தது. இந்த சூழ்நிலையில் அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் கேப்டனாக பொறுப்பு வகிக்கி, நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவரின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்தின் உலகக் கோப்பை கனவு நிறைவேறியது. இதன் பின்னணியில் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் தற்போதைய நடப்பு சாம்பியனாக இருப்பது இங்கிலாந்து அணி என்பதில் மாற்றமில்லை.
அத்துடன் உலக கோப்பை வென்ற அணி என்கிற கெளரவமிக்க எலைட் லிஸ்டிலும் இணைத்துகொண்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளான டி20, ஒரு நாள் கோப்பையை உலக கோப்பையை வென்ற அணியாகவும் மாறியுள்ளது.
2019 உலகக் கோப்பை தொடர், கடந்த 1992இல் நடைபெற்றது போல் 10 அணிகள் பங்கேற்க அனைத்து அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றது. இதில் டாப் 4 இடத்தை பிடித்த இங்கிலாந்து ஒரு வழியாக இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றாகிவிட்டது. இங்கிலாந்துக்கு எதிராக பலப்பரிட்சை செய்யும் அணியாக நியூசிலாந்து இருந்தது.
இந்த இரண்டு அணிகளும் உலக கோப்பை வென்றிடாத அணிகள் என்பதால் போட்டியின் மீது இயல்பாகவே சுவாரஸ்யம் பற்றிக்கொண்டது. ஒவ்வொரு அணிகளும் 9 லீக் போட்டிகள் வரை விளையாடியதால் மிக நீண்ட தொடராக அமைந்ததிருந்தாலும், அதுவே பேட்டிங், பவுலிங் என்ற இரண்டிலும் சவாலும், சம வாய்ப்பும் அளிக்கும் விதமாக காரணமானது.
அந்த வகையில் தொடரின் கடைசி கட்டத்தில் நடைபெற்ற போட்டிகள் குறைவான ஸ்கோர் த்ரில்லராக ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்தது. அந்த வகையில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற போதிலும், இங்கிலாந்தை காட்டிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்பதே பலரது பேவரிட்டாக இருந்தது.
இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் மெக்கா லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 241 ரன்கள் எடுத்து. இதை சேஸ் செய்து இங்கிலாந்துக்கு கடுமையான நெருக்கடியை நியூசிலாந்து பவுலர்கள் அளித்தனர். இருந்தபோதிலும் நன்கு தாக்குபிடித்து நிதானமாக விளையாடிய இங்கிலாந்து ஆல்ரவுண்டரும், நியூசிலாந்தை பூர்வீகமாக கொண்டவருமான பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை கடைசி பந்து வரை எடுத்து சென்று சமனில் முடித்தார்.
இதனால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதிலும் இரு அணிகளும் 15 ரன்கள் என சமமான ஸ்கோரை பதிவு செய்ய, போட்டி விதிமுறைப்படி அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து சாம்பியன் என்று அறிவிக்கப்பட்டது.
தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பி, ஆட்டத்தை சமன் செய்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரையும் சமன் செய்து இறுதியில் யாரும் எதிர்பார்த்திடாத திருப்புமுனையாக பவுண்டரியால் வெற்றி பெற்று வாகை சூடியது இங்கிலாந்து.
இதற்கு முன்னர் மூன்று முறை இங்கிலாந்துக்கு உலக கோப்பை கிடைக்ககூடாது என அந்த அணிக்கு எதிராக விதி விளையாடியாதாக கருதினாலும், இந்த முறை விதியின் விளையாட்டேலே கோப்பையை முதல் முறையாக முத்தமிட்டு தங்களது அணி மீது இருந்த கரும்புள்ளியை நீக்கியது.
இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை இருக்க முதல் இரண்டு பந்தை டாட் ஆக்குவார் நியூசிலாந்து பவுலர் போல்ட். 3வது பந்தில் சிக்ஸர் பறக்க விடும் ஸ்டோக்ஸ், 4வது பந்தில் அதே போல் மிட் விக்கெட் திசையில் அடிக்க முயன்று 2 ரன்கள் எடுப்பார். இந்த பந்தில் மார்டின் குப்தில் த்ரோ செய்யும் பந்து கிரீஸை தொட வரும் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு திரும்பி பவுண்டரி சென்றுவிடும். அவ்வுளவுதான் உடனடியாக களநடுவராக இருந்த குமாரா தர்மசேனா பவுண்டரி என சமிஞ்கை செய்து விடுவார்.
குறிப்பிட்ட இந்த பந்தில் நிகழ்ந்த சம்பவம் பற்றி பல்வேறு சர்ச்சைகளும், கேள்விகளும் அப்போது எழுந்தன. களநடுவர் குமார தர்மசேனாவின் முடிவும் அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த 4 ரன்களால் இங்கிலாந்துக்கு தேவைப்படும் ரன்கள் 2 பந்துகளில் 3 என குறைந்தது. கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன்கள், இரண்டு ரன்அவுட்களை செய்து நியூசிலாந்து போராட்டத்தை வெளிப்படுத்தியது.
அந்த வகையில் உலக சாம்பியனாக இங்கிலாந்து வாகை சூடினாலும் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்திய நியூசிலாந்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்தன.
1992 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து - தென்ஆப்பரிக்கா மோதிய அரையிறுதி போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 253 ரன்கள் இலக்கை சிறப்பாக சேஸ் செய்து வந்தது தென்ஆப்பரிக்கா. அப்போது 7 பந்துகளுக்கு 22 ரன்கள் தேவை என்று இருந்தபோது மழை குறுக்கிட்டதால் இலக்கு 1 பந்துக்கு 22 ரன்கள் அடிக்க வேண்டும் என மாற்றியமைக்கப்பட்டது.
அப்போது விதியின் விளையாட்டால் இறுதிப்போட்டிக்குள் எளிதாக நுழைந்த இங்கிலாந்து, பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவி கோப்பையை கைவிட்டது. இதையடுத்து இந்த முறையில் மீண்டும் ஒரு விதி விளையாட்டால் நடப்பு சாம்பியன் அணியாக மாறியுள்ளது.
டாபிக்ஸ்