Nz vs Ire T20 world cup: முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து
Nov 05, 2022, 01:45 PM IST
அயர்லாந்து பெளலர் லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி நியூசிலாந்து ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார். பேட்டிங்கில் விட்டதை அசத்தலான பெளலிங் மூலம் பிடித்த நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள், 35 ரன்கள் வித்தியாசத்தில் அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.
டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதிக்குள் நுழைய வேண்டுமானால் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமே போதுமானது என்ற தெளிவான நோக்கத்துடன் களமிறங்கிய நியூசிலாந்து சிறப்பான ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் மூலம் அதை வெற்றிகரமாக செய்துள்ளது.
முதலில் பேட் செய்தால் இமாலய ஸ்கோரை வெற்றி இலக்காக நிர்ணயித்தால் ஆஸ்திரேலியாவில் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்கிற தாரக மந்திரத்தை நன்கு புரிந்து கொண்டு நியூசிலாந்து அணி அதற்கேற்ப் தொடக்கத்தில் நிதானமும், கடைசி கட்டத்தில் அதிரடியும் என்ற திட்டத்தில் தெளிவாகி விளையாடியது.
ஓபனிங் பேட்ஸ்மேன்களான பின் ஆலென் 32, கான்வே 28 என நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்க, அதை சரியாக பயன்படுத்தி கேப்டன் வில்லியம்சன் ரன்குவிப்பில் ஈடுபட தொடங்கினார்.
வில்லியம்சன் 61, கடைசி கட்டத்தில் அதிரடி வெளிப்படுத்தி மிட்செல் 31 ரன்கள் எடுக்க அணியின் ஸ்கோர் 20 ஓவரில் 185 ரன்கள் எடுக்கப்பட்டது.
ஆட்டத்தின் 19வது ஓவரில் அயர்லாந்து பெளலர் லிட்டில் எடுத்த ஹாட்ரிக் விக்கெட் மூலம் நியூசிலாந்தின் ரன்குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
அத்துடன் நடப்பு உலகக் கோப்பையில் இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட் சாதனையை புரிந்துள்ளார் அயர்லாந்து பெளலர் ஜோஷ் லிட்டில்.
186 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய அயர்வாந்து ஓபனிங் பேட்ஸ்மேன்கள் பால் ஸ்டிர்லிங், ஆண்டி பால்பிர்னி ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர்.
ஸ்டிர்லிங் 37, பால்பிர்னி 30 என அவுட்டாக, நியூசிலாந்து பந்து வீச்சாளர்களின் பெளலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய தொடங்கின.
மிடில் ஆர்டர் பேட்ல்மேன் டாக்ரெல் ஓரளவு தாக்குபிடித்து 23 ரன்கள் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர்.
20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்த அயர்லாந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதையடுத்து 7 புள்ளிகளும், நெட் ரன்ரேட்டிலும் 2.113 பெற்று முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
டாபிக்ஸ்