22 கிராண்ட்ஸ்லாம், கோல்டன் ஸ்லாம் பட்டம்..ஒரு சகாப்தத்தின் முடிவு! நடால் ஓய்வு அறிவிப்புக்கு நெகிழும் ரசிகர்கள்
Oct 11, 2024, 03:58 PM IST
ரஃபேல் நடாலின் ஓய்வு டென்னிஸில் ஒரு சகாப்தத்தின் முடிவை குறித்திருப்பதாக ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள். களிமண் களத்தின் ராஜா 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், கோல்டன் ஸ்லாம் பட்டம் என பல்வேறு பட்டங்களுக்கும், சாதனைகளுக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார்.
டென்னிஸ் விளையாட்டில் ஜாம்பவான் வீரராக போற்றப்படும் ரஃபேல் நடால், தனது விளையாட்டு வாழ்க்கைகான திரைச்சீலைகளை இழுத்துள்ளார். டென்னிஸ் வரலாற்றில் எல்லா காலத்திலும் மிகச்சிறந்ததாக நினைவுகூரப்படும் ஆட்டங்களை நடால் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஸ்பெயின் வீரரான நடால், தனது சமூக வலைத்தள பக்கத்தில் விடியோவின் மூலம் பகிர்ந்த இதயப்பூர்வமான அறிக்கையில், ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அவர் பகிர்ந்த விடியோவில், "நான் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை என்னவென்றால், சில கடினமான ஆண்டுகள். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகள். என்னால் வரம்புகள் இல்லாமல் விளையாட முடிவதில்லை.
இது ஒரு கடினமான முடிவு. இதை எடுக்க சிறிது காலம் எடுத்துக்கொண்டேன். நான் நினைத்ததை விட நீண்ட மற்றும் மிகவும் வெற்றிகரமான ஒரு தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்." என்று தனது தாய் மொழியான ஸ்பானிஷில் பேசியிருந்தார்.
நடால் கடைசி போட்டி
டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டி தான் டென்னிஸ் விளையாட்டில் தான் விளையாட இருக்கும் கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறினார். வரும் நவம்பர் 19 மற்றும் 21க்கு இடையில் நடக்கும் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி, நெதர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த அணியில் 38 வயதாகும் ஸ்டார் வீரரான ரஃபேல் நடால் விளையாட இருக்கிறார். காயத்தால் அவதிப்பட்ட நடால், அதிலிருந்து குணமடைந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக காயம் காரணமாக குரூப் பிரிவு போட்டிகளில் பங்கேற்கவில்லை.
ஆண்கள் டென்னிஸில் ஆதிக்கம்
ஆண்கள் டென்னிஸ் விளையாட்டில் நட்சத்திர வீரர்களான ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் ஆகியோருடன் இணைந்து ஆதிக்கம் செலுத்தியவராக ரஃபேல் நடால் இருந்துள்ளார். வெவ்வேறு நாடுகளை சேர்ந்த இந்த மூன்று வீரர்களும் ஆண்கள் டென்னிஸ் விளையாட்டில் மூவேந்தர்கள் போல் செயல்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது நடால் தனது டென்னிஸ் பயணத்துக்கு முற்று புள்ளி வைக்கவுள்ளார்.
2000களின் முற்பகுதியில் பெடரரின் ஆதிக்கத்தை முறியடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக்கொண்டவர் நடால். குறிப்பாக களிமண் மைதானப் போட்டிகளில் இவரது ஆதிக்கம், களிமண் களத்தின் ராஜா என்று அழைக்கும் விதமாக இருந்துள்ளது. தனது நீண்ட நெடிய டென்னிஸ் பயணத்தில் களிமண் களத்தில் 9 முறை மட்டுமே அவர் தோல்வி அடைந்திருப்பதே இதற்கு சான்றாக உள்ளது.
ரஃபேல் நடால் டென்னிஸ் வாழ்க்கையில் முக்கிய எண்கள்
209 - ஏடிபி தரவரிசையில் முதலிடத்தில் நடால் கழித்த வாரங்களின் எண்ணிக்கை
22 - நடால் ஓய்வு பெறும் போதும் பெற்றிருக்கும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை. அவரது 22வது பட்டம் 2022 பிரெஞ்ச் ஓபனில் வந்தபோது, அந்த நேரத்தில் எந்த ஆண் வீரரும் இத்தனை பட்டங்கள் வென்றதில்லை என்பது சாதனையாக இருந்தது. இந்த சாதனையை பின்னர் ஜோகோவிச் முறியடித்துள்ளார்
14 - க்ளே கோர்ட் கிராண்ட்ஸ்லாமில் நடால் வென்ற பிரெஞ்ச் ஓபன் பட்டங்களின் எண்ணிக்கை.
81 - 2005 மற்றும் 2007க்கு இடையில் அவர் களிமண்ணில் தொடர்ச்சியாக வென்ற போட்டிகளின் எண்ணிக்கை. இது ஆடவர் ஒற்றையர் பிரிவில் நீண்ட வெற்றி என்ற சாதனையை பெற்றுள்ளது.
24 - இந்த வயதில் ஒரே ஆண்டில் நான்கு பெரிய கோப்பைகளை வென்று, இளம் வயதில் இந்த சாதனையை செய்தவராக உள்ளார்
9 - நடால் தனது டென்னிஸ் வாழ்க்கையில் களிமண் மைதானத்தில் அடைந்த தோல்வியின் எண்ணிக்கை
4 - நான்கு முறை பிரெஞ்சு ஓபனில் ஒரு செட்டையும் இழக்காமல் வென்றிருக்கிறார். இதன் மூலம் ஒரு செட்டையும் இழக்காமல் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற உலகின் முதல் டென்னிஸ் வீரர் என்ற சாதனை புரிந்துள்ளார்.
3 - கேரியர் கோல்டன் ஸ்லாம் வென்ற வீரர்களின் எண்ணிக்கை. அதாவது நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு கோல்டன் ஸ்லாம் பட்டம் வழங்கப்படும். இந்த பட்டத்தை வென்று மூன்று டென்னிஸ் வீர்ரகளில் ஒருவராக நடால் திகழ்கிறார். மற்ற இரண்டு வீரர்கள் ஆண்ட்ரே அகாசி மற்றும் ஜோகோவிச்
2 - நடால் பெற்ற ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை. ஸ்பெயின் வீரர் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் மற்றும் ரியோ 2016இல் மார்க் லோபஸுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார்.
டாபிக்ஸ்