HBD Milkha Singh: ஓட்டப்பந்தயத்தில் தனி முத்திரை பதித்த மில்கா சிங்கின் பிறந்த நாள் இன்று
Nov 20, 2023, 06:15 AM IST
இளமைக் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர், ஓட்டப் பந்தய வீரராகவும் எளிதில் ஜெயித்துவிட முடியவில்லை. அதற்காக அசுரத்தனமான உழைப்பைக் கொடுத்தார்.
நாடு சுதந்திரம் அடைந்ததற்கு முன்பு 1929-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி கோவிந்த்புராவில் (இப்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தார் மில்கா சிங்.
இவருடன் சேர்த்து உடன் பிறந்தோர் மொத்தம் 15 பேர். அவர்களில் 8 பேர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் உயிரிழந்துவிட்டனர்.
பிரிவினை ஏற்பட்டபோது கோவிந்த்புராவில் நிகழ்ந்த வன்முறையில் இவர் குடும்பத்தைவிட்டு பிரிய நேரிட்டது. வன்முறையில் இவரது பெற்றோர், சகோதரர், 2 சகோதரிகள் இறந்துவிட உடைந்து போனார் மில்கா சிங்.
ஹிந்துக்களும், சீக்கியர்களும் கொலை செய்யப்படுவது தொடர்கதையானதால் சொந்த ஊரை விட்டு டெல்லியில் அகதிகள் முகாமில் தங்கினார். அந்த முகாமில் தனது சகோதரியைச் சந்தித்து அவருடன் வசிக்கத் தொடங்கினார்.
ஒரு முறை ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த குற்றத்துக்காக திகார் சிறையில் சிறை வாசமும் அனுபவித்தார். இவரது சகோதரி நகைகளை விற்று அவரை சிறையிலிருந்து மீட்டு வந்தார்.
முகாமில் இருக்கும்போது கொள்ளை கும்பலுடன் இணைந்து ரயிலில் நிலக்கரி திருடுவதையும் செய்துவந்தார் மில்கா சிங். ஒரு கட்டத்தில் கொள்ளையடிப்பதை நிறுத்திவிட்டு இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு முயற்சி செய்த மில்கா சிங், 4-ஆவது முயற்சியில் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் உயரதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து விளையாட்டு வீரராக மாறினார்.
இளமைக் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர், ஓட்டப் பந்தய வீரராகவும் எளிதில் ஜெயித்துவிட முடியவில்லை. அதற்காக அசுரத்தனமான உழைப்பைக் கொடுத்தார்.
பகல் நேரத்தில் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளிலும், இரவு நேரத்தில் ஓட்டப் பயற்சியையும் செய்து வந்தார். இவரின் உழைப்பை நேரில் கண்டு வியந்த ராணுவ முகாம் உயரதிகாரி, முழு நேரமும் ஓட்டப் பயிற்சியில் பங்கெடுக்கச் செய்ய அனுமதி அளித்து ஊக்கம் கொடுத்தார்.
அதன்பிறகு ஓட்டத்தில் பல சாதனைகளை நிகழ்த்தினார் மில்கா சிங். 1958-இல் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்தப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய அளவில் அதிவேக வீரர் என்றழைக்கப்பட்ட அப்துல் காலிக்கை (பாகிஸ்தான்) நூலிழையில் வீழ்த்தினார் மில்கா சிங். ஆசிய அளவில் 200 மீட்டர் ஓட்டத்தில் அதற்கு முன்பு நிகழ்த்தப்பட்டிருந்த சாதனையையும் முறியடித்தார் மில்கா.
1962-இல் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்திலும், அதே போட்டியில் 4*400 மீட்டர் தொடரோட்டத்திலும் தங்கம் வென்று இந்தியாவின் அடையாளமாகிப் போனார் மில்கா சிங்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 1956-இல் நடைபெற்ற ஒலிம்பிக், இத்தாலியின் ரோம் நகரில் 1960-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக், 1964-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆகிய போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றார் மில்கா சிங்.
எனினும், அவரால் பதக்கம் எதுவும் வெல்ல முடியாமல் போனது சோகமே. இருப்பினும் அவர் இத்தனை போட்டிகளில் கலந்துகொண்டதே சாதனையாகப் பார்க்கப்பட்டது.
இவர் பிறந்த ஊரான கோவிந்த்புரா, பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இணைந்துவிட்டதாலும், அவருடைய குடும்பத்தினர் வன்முறையில் கொல்லப்பட்டதாலும் மில்கா சிங் அங்கு செல்ல விரும்பாமல் இருந்து வந்தார்.
எனினும், அப்போது பிரதமராக இருந்த நேரு, இவரை பாகிஸ்தானில் நடக்க இருந்த நட்பு ரீதியிலான விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதுவரை பாகிஸ்தான் சென்று விளையாடுவதை தவிர்த்து வந்த மில்கா சிங், அந்தப் போட்டியில் (200 மீ ஓட்டம்) பங்கேற்று வெற்றியும் பெற்றார். ஒட்டுமொத்த தேசமும் அவரைக் கொண்டாடியது.
பாகிஸ்தானின் அதிபராக இருந்த அயூப் கான், ‘THE FLYING SIKH’ என்ற பெயரை சூட்டி மில்கா சிங்கை புகழ்ந்தார். போட்டி முடிந்ததும் ‘போட்டியில் நீங்கள் ஓடவில்லை. பறந்தீர்கள்’ என்று மில்கா சிங்கை வாழ்த்தினார் அயூப் கான்.
இந்தியாவுக்கு முதல்முறையாக காமன்வெல்த்தில் (1958) தங்கம் வென்று கொடுத்தவரும் மில்கா சிங்தான். 77-க்கும் அதிகமான ஓட்டப் பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ள மில்கா சிங்கின் வாழ்க்கையத் தழுவி ‘பாக் மில்கா பாக்’ என்ற படமும் எடுக்கப்பட்டுள்ளது.
‘THE RACE OF MY LIFE’ என்ற பெயரில் மில்கா சிங் எழுதிய சுயசரிதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலிருந்தே அதிகம் ஓடியவர் மில்கா சிங். வாழ்க்கை எனும் ஓட்டப் பந்தயத்தில் நம்முடன் மோதுபவர்களை கவனிக்காமல் நமது இலக்கை நோக்கி ஓடினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்துகிறது மில்கா சிங்கின் வாழ்க்கை கதை.
டாபிக்ஸ்