ஆண்குழந்தைக்கு தாயானார் முன்னாள் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா
Jul 16, 2022, 09:46 PM IST
ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா ஆண்குழந்தைக்கு தாயாகியிருப்பதை தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார்.
திருமணம் செய்துகொள்ளாமல் அலெக்ஸாண்டர் கில்கேஸ் என்பவருடன் வாழ்ந்து வரும் மரியா ஷரபோவாவுக்கு ஜூலை 1ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஷரபோவா தனது குழந்தைக்கு தியோடர் என பெயர் வைத்துள்ளார்.
பார்ட்னர் அலெக்ஸாண்டர் கில்கேஸ், தனது குழந்தை தியோடர் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், "எங்களது சிறிய குடும்பம் கேட்டுக்கொண்ட அழகான, சவால் நிறைந்த வெகுமதியான பரிசு" என்று குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், அதைப் பற்றி உலகுக்கு அவர் அறிவித்துள்ளார்.
ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா கடந்த 2020ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். 17 வயது இருக்கும்போது 2004ஆம் ஆண்டு விம்பிள்டன் படத்தை வென்ற இளம் வீராங்கனையாக சாதனை புரிந்தார்.
இதைத்தொடர்ந்து 2006ஆம் ஆண்டில் யுஎஸ் ஓபன், 2008இல் ஆஸ்திரேலியா ஓபன், 2012 மற்றும் 2014இல் பிரென்சு ஓபன் தொடர்கள் வென்று சாதனை புரிந்தார்.
2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்த இவர், 2019ஆம் ஆண்டில் தோல்பட்டையில் காயம் காரணமாக அவதியுற்றார்.
இதன்பின்னர் அவரது டென்னிஸ் வாழ்க்கை கடினமானதாகவே அமைந்தது. 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார்.
2016ஆம் ஆண்டு ஊக்க மருந்து பயன்படுத்திய சர்ச்சையில் சிக்கிய அவருக்கு இரண்டு ஆண்டு டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டுக்கு பின் தட 15 மாதங்களாக குறைக்கப்பட்டது.
ஓய்வுக்கு பின்னர் தனது பார்ட்னர் அலெக்ஸாண்டர் கில்கேஸுடன் மிக எளிமையாக வாழ்க்கையை நடந்தி வந்த அவர், தற்போது குழந்தைக்கு தாயாகியுள்ளார்.