Kohli Record: ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அடித்த சதம்! இத்தனை சாதனைகளை முறியடித்த கோலி
Jul 22, 2023, 08:32 PM IST
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்தமண்ணில் இரண்டாவது முறையாக சதமடித்த கோலி சில சாதனைகளையும் முறியடித்துள்ளார். அதை பற்றி பார்க்கலாம்.
நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் விராட் கோலி அந்நிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார். அதுவும் சிறப்பு வாய்ந்த 500வது சர்வதேச போட்டியில் இது நிகழ்ந்துள்ளது. கடைசியாக 2018ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பெர்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் கோலி. அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் கோலி 123 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா தோல்வியை தழுவியது.
இதைத்தொடர்ந்து 5 ஆண்டுகள் கழித்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போர் ஆஃப் ஸ்பெயின் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இரண்டாவது முறையாக கோலி சதமடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சதமடித்த இந்திய பேட்ஸ்மேன்களில் சுனில் கவாஸ்கர் அதிகபட்சமாக 7 சதங்களை அடித்துள்ளார். ராகுல் டிராவிட், திலீப் சர்தேசாய், பாலி உம்ரிகர் ஆகியோர் தலா 3 சதங்களை அடித்துள்ளனர். இதையடுத்து சச்சின் டென்டுல்கர் வெஸ்ட்இண்டீஸில் இரண்டு சதங்களை அடித்துள்ளார். தற்போது அதனை சமன் செய்துள்ளார் கோலி.
இந்த ஒற்றை சதம் மூலம் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் கோலி. அதன்படி கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களின் சாதனையை முறியடித்துள்ளார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனின் 29 டெஸ்ட் சதங்களை சமன் செய்துள்ளார் கோலி. அதேபோல் இந்திய பேட்ஸ்மேன்களில் டெல்டுல்கர், டிராவிட், சுனில் கவாஸ்கர் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக சதமடித்த பேட்ஸ்மேன்களில் நான்காவது வீரராக உள்ளார்.
நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கி 24 சதங்களை அடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன் லாராவின் சதத்தை முறியடித்துள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கியிருக்கும் விராட் கோலி 25வது சதத்தை பதிவு செய்துள்ளார். அத்துடன் சச்சின் டென்டுல்கர், ஜேக் காலிஸ், மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளார்.
இந்த லிஸ்டில் சச்சின் டென்டுல்கர் 44 சதங்களுடன் முதல் இடத்திலும், காலிஸ் 35, ஜெயவர்த்தனே 30 என முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். தற்போது விளையாடி வரும் பேட்ஸ்மேன்களில் இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர், கோலிக்கு அருகில் 19 சதங்களுடன் உள்ளார். இவர்கள் இருவரும் முறையே தங்களது அணிக்காக நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்குகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்