Jos Butler: கோடிகளில் பணம்! ஐபிஎல் அணியுடன் டீல் - சர்வதேச கிரிக்கெட்டுக்கு Bye சொல்லும் இங்கிலாந்து வீரர் பட்லர்?
Jun 30, 2023, 01:33 PM IST
கோடிகளில் சம்பளம், நான்கு ஆண்டுகள் வரை ஒரே அணி, பல்வேறு டி20 லீக் தொடர்களில் விளையாட்டு என ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தரும் டீலுக்கு இங்கிலாந்து வீரர் ஜோஸ் படலர் சம்மதம் தெரிவிக்கவுள்ளாராம்.
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், டி20 அணி கேப்டனாகவும் இருந்து வருகிறார் ஜோஸ் பட்லர். ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் அவர் அணி நிர்வாகத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கைகோர்க்கவுள்ளார். அதாவது நான்கு ஆண்டுகள் வரை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் அதன் கிளை அணிகள் விளையாடு டி20 லீக்கில் விளையாட சம்மதம் தெரிவிக்கவுள்ளார். இதற்காக அவருக்கு கோடிகளில் சம்பளமும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் டி20 தொடர் தவிர தென்ஆப்பரிக்காவில் நடைபெறும் SA20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ், வெஸ்ட்இண்டீஸில் நடைபெறும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் பார்போடாஸ் ராயல்ஸ் ஆகிய பெயர்களில் இரண்டு அணிகளை கொண்டிருப்பதுடன், அந்த தொடர்களிலும் விளையாடி வருகிறது.
இதையடுத்து ஐபிஎல், SA20 லீக், கரீபியன் ப்ரீமியர் லீக் என மூன்று தொடர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெறுகின்றன. இதையடுத்து ராஜஸ்தான் அணியுடன் கைகோர்ப்பதன் மூலம் மேற்கூறிய மூன்று தொடர்களில் விளையாடும் விதமாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு லீக் தொடர்களிலும் கோடிகளில் சம்பளம் வழங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே தற்போது 32 வயதாகும் பட்லர், 36 வயது வரை தொடரும் இந்த டீல்க்கு சம்மதம் சொல்ல இருப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணியின் பிரதான தொடர்களை மிஸ் செய்யக்கூடும்.
ஏற்கனவே மற்றொரு இங்கிலாந்து வீரரான ஜோப்ரா ஆர்ச்சருடன் இதுபோன்றதொரு ஒப்பந்தம் செய்து கொள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முயற்சித்தது.
இவ்வாறு தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் உள்ளூர் டி20 லீக் அணிக்காக கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தமாகும் பட்சத்தில், அந்த வீரர் தேசிய அணிக்காக விளையாட முடியாது. ஒரு வேளை தேசிய அணியில் இணைந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டுமானால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வேண்டுகோளுக்கிணங்க, அவர் தற்போது விளையாடி வரும் டி20 லீக் அணி சம்மதத்துடன் விடுவிக்கப்படுவார்.
அந்த வகையில் ஒரு சர்வதேச அணியில் விளையாடி வரும் சிறந்த வீரருக்கு பல்வேறு சலுகைகளும், கோடிகளில் பணமும் கொடுத்து உள்ளூர் டி20 லீக் அணிகள் மொத்தமாக தங்களுக்காகவே என சொந்தமாக்கி கொள்ளும் விதமாகவே இந்த ஒப்பந்தமுறை அமைந்துள்ளது. தற்போது இந்த புதிய ஒப்பந்தமுறையில் சிறந்த வீரர்களை வளைத்துபோடுவதில் உள்ளூர் டி20 கிரிக்கெட் அணிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
எனவே இதை தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வரும் மத்திய ஒப்பந்தத்தை, பல ஆண்டுகளுக்கு நீடிப்பு செய்வதன் மூலம் சிறந்த வீரர்கள் தக்க வைத்து கொள்ளலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஆலோசித்து வருகிறது.
ஏற்கனேவே நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இதற்கு தொடக்கபுள்ளி வைத்தார். நியூசிலாந்துடனான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அவர், தனது வசதிக்கேற்ப உள்ளூர் டி20 லீக்குகளில் பங்கேற்பதுடன், குடும்பத்துடனும் போதிய நேரத்தை செலவழிக்கலாம் எனவும் தெரிவித்தார். இவரை போல் நியூசிலாந்து அணியில் மேலும் சில வீரர்களும் அணியுடனான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகினர்.
இதைத்தொடர்ந்து தற்போது கோடிகளில் கிடைக்கும் பணத்தை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அணியையும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் விலகும் முடிவை ஜோஸ் பட்லர் எடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஆறு சீசன்களாக பயணப்பட்டு வரும் பட்லர், அந்த அணிக்காக 71 போட்டிகளில் பங்கேற்று 2700 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதில் 5 சதமும், 18 அரைசதமும் அடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9