Italian Open Tennis: தொடர்ந்து 17வது முறை.. இத்தாலியன் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜோகோவிச்!
May 17, 2023, 12:59 PM IST
Novak Djokovic: 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் உடனான இவரது ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் மே 8ம் தேதி தொடங்கியது. 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்களும், வீராங்கனைகளும் இந்தப் போட்டியில் பங்கெடுத்து விளையாடி வருகின்றனர்.
நம்பர் 2 வீரர்கள் அல்காரஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-6, 6-7 (4-7) என்ற நேர் செட் கணக்கில் ஹங்கேரி வீரர் பாபியன் மாரோஸ்சனிடம் தோல்வி அடைந்து வெளியேறிவிட்டார்.
நம்பர் 1 வீரர் செர்பியாவின் ஜோகோவிச் இன்னும் ரேஸில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்.
இன்று நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள டென்மார்க் வீரர் ஹோல்கர் ருனேவை எதிர்கொள்கிறார்.
ஹோல்கர் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாபிரின்னை 6-4, 5-7, 6-4 என போராடி வீழ்த்தி காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் உடனான இவரது ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதனிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவுடனான போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனைச் சேர்ந்த அன்ஹெலினா கலினினா, பிரேசில் வீராங்கனை பீட்ரிஜ் ஹட்டாட் மையாவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் முடிவில் கலினினா 6-7 (2-7), 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வீழ்த்தினார்.
அரையிறுதிச்சுற்றிலும் நுழைந்தார் கலினினா. அரையிறுதியில் ரஷ்யாவைச் சேர்ந்த வெரோனிகா குடர்மெதோவாவை வரும் வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா ஓராண்டுக்கு மேலாக போர் தொடுத்து வரும் காரணத்தால் அந்த நாட்டின் கொடியை பிரதிபலிக்காமல் பொது வீராங்கனை பிரிவில் வெரோனிகா இப்போட்டியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
இந்நிலையில், இதே போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோஷிய வீராங்கனை டொன்னாவை 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
காலிறுதியில் கஜகஸ்தானைச் சேர்ந்த போட்டித் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள எலெனாவை நாளை எதிர்கொள்கிறார்.
இகா ஸ்வியாடெக், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏடிபி தரவரிசையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனைாக இருக்கிறார் ஸ்வியாடெக் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்