IPL Record: 15 ஆண்டு கால சாதனையை முறியடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்!
May 22, 2023, 02:46 PM IST
Vivrant Sharma: 15 ஆண்டுகளாக முறியடிக்கப்பட்டாமல் இருந்துவந்த இச்சாதனையை விவ்ராந்த் சர்மா முறியடித்துள்ளார்.
16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
நாளை முதல் பிளே-ஆஃப் ஆட்டம் நடைபெறவுள்ளது. அந்த ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும், நடப்பு சாம்பியன் குஜராத்தும் மோதுகின்றன.
எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடி 4 இல் மட்டுமே வென்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.
எனினும், ஐபிஎல் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இளம் வீரர்களுக்கு அடையாளம் கொடுக்கும் போட்டியாகவும் திகழ்வதால், ஐதராபாத் அணியில் இருந்து அப்படியொரு இந்திய இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது பெயர் விவ்ராந்த் சர்மா. ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர். இதுதான் முதல் ஐபிஎல் போட்டியாகும்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
15 ஆண்டுகளாக முறியடிக்கப்பட்டாமல் இருந்துவந்த இச்சாதனையை விவ்ராந்த் சர்மா முறியடித்துள்ளார்.
அறிமுக போட்டியில் விவ்ராந்த் சர்மா 47 பந்துகளில் 69 ரன்களை எடுத்துள்ளார். இதில் 2 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்த ஸ்கோரை பதிவு செய்தார்.
விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக அவர் விளையாடியிருக்கிறார்.
கடந்த ஆண்டு இந்தத் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த வீரரும் இவரே. மொத்தம் 395 ரன்கள் எடுத்திருந்தார்.
அதில் ஒரு சதம், 2 அரை சதங்கள் அடங்கும்.
2008இல் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமான ஸ்வப்னில் அஸ்னோத்கர் கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் 60 ரன்கள் எடுத்திருந்தே ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக அறிமுகமான கவுதம் கம்பீர், 2008இல் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 58 ரன்களை விளாசினார்.
இந்த வரிசையில் ராஜஸ்தானுக்காக தற்போது விளையாடிவரும் தேவ்தத் படிக்கல், ஆர்சிபி அணியில் அறிமுகமான முதல் ஆட்டத்தில் 56 ரன்களை விளாசினார்.
இவர்களின் சாதனையை தகர்த்தெறிந்திருக்கிறார் விவ்ராந்த் சர்மா.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு 140 ரன்களை விவ்ராந்த் சர்மாவும், மயங்க் அகர்வாலும் விளாசினர்.
எனினும், அந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
டாபிக்ஸ்