தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl Record: ஐபிஎல்-இல் 200+ ரன்களை சேஸிங்கில் அதிவேகமாக விரட்டி பிடித்த அணிகள் விவரம் இதோ

IPL Record: ஐபிஎல்-இல் 200+ ரன்களை சேஸிங்கில் அதிவேகமாக விரட்டி பிடித்த அணிகள் விவரம் இதோ

Manigandan K T HT Tamil

May 10, 2023, 04:07 PM IST

google News
IPL 2023: ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி அடைந்தது. (REUTERS)
IPL 2023: ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி அடைந்தது.

IPL 2023: ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி அடைந்தது.

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 200 என்ற இலக்கை அதிவேகமாக சேஸ் செய்து சாதனை படைத்திருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் இந்தச் சாதனையை மும்பை நிகழ்த்தியது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மே 9 அன்று 54-வது லீக் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. டாஸ் ஜெயித்த மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து, ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்தது. 120 பந்துகளில் 200 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் விளையாடியது.

ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய இஷான் கிஷன் தொடக்கம் முதலே அதிரடி காண்பித்தார். அதில் அவர் 4 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் ஐபிஎல் கரியரில் 100 சிக்ஸர்களை பதிவு செய்தார். அதேபோல், மொத்தம் 204 பவுண்டரிகளை விளாசியிருக்கிறார்.

எனினும் ஹசரங்கா பந்துவீச்சில் அனுஜ் ராவத்திடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதேபோல், இந்த ஆட்டத்தில் அரை சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் கிரிக்கெட்டில் மொத்தம் 324 ஃபோர்ஸையும் 100 சிக்ஸர்களையும் விளாசியிருக்கிறார். மேலும், 3000 ரன்களையும் ஐபிஎல் கரியரில் கடந்தார்.

சூர்ய குமார் யாதவ் 35 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 ஃபோர்ஸ் விளாசி 83 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். நெஹல் வதேரா, சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பாக விளையாடியது. வதேரா சிக்ஸர் அடித்து அரை சதம் விளாசியதுடன் 200 ரன்களை மும்பை எட்டி வெற்றி கண்டது.

இவ்வாறாக, மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி அடைந்தது.

பாயிண்ட் டேபிளில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

16.3 ஓவர்களிலேயே சேஸிங்கை நிறைவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்களை அதிவேகமாக சேஸிங் செய்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

21 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், அந்த அணி வெற்றியை ருசித்தது.

இதற்கு முன்பு…

2017-இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 200 பிளஸ் ரன்களை சேஸிங்கில் அதிவேகமாக எட்டி ஜெயித்த அணியாக திகழ்ந்து வருகிறது. குஜராத் லயன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் தான் டெல்லி சேஸிங் செய்தது.

15 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், 208 ரன்கள் என்ற இலக்கை எட்டிப்பிடித்தது.

இதேபோல், 200 பிளஸ் ரன்களை அதிவேகமாக சேஸிங் செய்த மற்றொரு அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப். 2010இல் 10 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஜெயித்தது.

தற்போது இந்த லிஸ்ட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி