GT vs CSK: குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பொளந்து கட்டிய தமிழக வீரர்-சிஎஸ்கேவுக்கு இமாலய இலக்கு!
May 29, 2023, 09:43 PM IST
Sai Sudharshan: தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பைனல் கோலாகலமாக குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் தொடங்கியது. இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸில் ஜெயித்த சிஎஸ்கே பவுலிங்கைத் தேர்வு செய்தது.
அதைத் தொடர்ந்து குஜராத் பேட்டிங் செய்தது. முதலில் விளையாடி குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில், இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.
120 பந்துகளில் 215 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே விளையாடவுள்ளது.
தொடக்க வீரர்களாக ரித்திமான் சாஹா, சுப்மன் கில் ஆகியோர் களம் புகுந்தனர்.
தொடக்கத்திலேயே துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் லட்டு போல் சஹரிடம் கேட்ச் கொடுத்தார் கில். ஆனால், அந்தக் கேட்ச் அவரது கையை விட்டு நழுவியது. அதைத் தொடர்ந்து ஜடேஜா ரன்-அவுட்டை மிஸ் செய்தார்.
இதனால், 7 பவுண்டரிகளை விளாசினார் கில். 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா வீசிய பந்தை அடிக்க முயன்ற ஸ்டிரைக்கை விட்டு வெளியே வந்தார். சற்று தான் வெளியே வந்திருப்பார். பின்னாடி இருப்பது உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் ஆயிற்றே!
0.12 விநாடிகளில் கில்லை ஸ்டம்பிங் செய்தார் தோனி. அதைத் தொடர்ந்து கில் ஆட்டமிழந்தால் என்ன நான் இருக்கிறேன் என அரை சதம் அடித்தார் ரித்திமான் சாஹா. எனினும், அடுத்த சில பந்துகளிலேயே பந்தை தூக்கி அடித்து ஆட்டமிழந்தார்.
அவரது கேட்ச்சை தோனி பிடித்தார். அப்போது அவர் 39 பந்துகளில் 54 ரன்களை பதிவு செய்திருந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா நிதானமாக விளையாடினர். சாய் சுதர்ஷ் அரை சதம் பதிவு செய்து அசத்தினார். அவர் தீக்ஷனா ஓவரில் பறக்க விட்ட ஒரு சிக்ஸர் பரிசுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது பட்டது. மீண்டும் அவரது ஓவரில் மற்றொரு சிக்ஸரையும் விளாசினார்.
17வது ஓவரை துஷார் தேஷ்பாண்டே வீசினார். அந்த ஓவரில் சிக்ஸர், பவுண்டரிகள் என பொளந்து கட்டினார் சாய் சுதர்ஷன்.
19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்தது குஜராத் டைட்டன்ஸ். தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரின் 3வது பந்தில் அவர் எல்பிடபிள்யூ ஆனார். பத்திரனா அந்த ஓவரை வீசினார்.
கடைசி பந்தில் ரஷித் கான் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே விளையாடவுள்ளது.
டாபிக்ஸ்