ஐபிஎல் 2022: புதிய அவதாரத்தில் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா
Mar 23, 2022, 04:33 PM IST
ஐபிஎல் தொடக்கத்திலிருந்து சிஎஸ்கே ரசிகர்களின் சொத்தாக இருந்த சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் எந்த அணியினராலும் ஏலம் எடுக்கப்படவில்லை. மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் அவர் தற்போது ஐபிஎல் அணிக்காக விளையாடாத போதிலும், வர்ணனையாளராக விஸ்வரூபம் எடுக்கிறார்.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரெய்னா ஒரு போட்டி கூட மிஸ் செய்யாமல் 7 சீசன்கள் வரை விளையாடினார். இதன் பின்னர் சிஎஸ்கேவுக்கு விதித்த தடை காரணமாக குஜராத் லயன்ஸ் அணியில் விளையாடிய அவர் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. இதன் பின்னர் விரல் விட்டு என்னும் அளவிலேயே ஐபிஎல் போட்டிகளை மிஸ் செய்திருந்த ரெய்னாவை எந்த அணிகளும் ஏலத்தில் வாங்காத நிலையில் கழட்டிவிடப்பட்டார்.
இதற்கு ரெய்னாவின் ஃபிட்னஸ், ஃபார்ம், சொந்த பணிகள் மீது அதிக அக்கறை செலுத்துவது போன்ற பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் செய்த சாதனைகளை வைத்து பார்க்கும்போது, அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய கெளரவுமும், மரியாதையும் அளிக்காமல் அவமானப்படுத்தியதாகவே ரசிகர்கள் கொந்தளித்தனர்.
ஏலத்தில் எடுக்காத போதிலும் இறுதி நேரத்தில் ஏதாவது அணி அவரை சேர்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் தாராளமாகவே உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள குஜராத் அணியில் அவர் சேர்க்கப்படலாம் என்கிற தகவலும் பரவியது. அதற்கு ஏற்றார்போல் ரெய்னாவுக்கான ஆதரவை ரசிகர்களும் குஜராத் அணி நிர்வாகத்திடம் வெளிப்படுத்தினர்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 15வது சீசனாக உள்ளது. இதில் 85 வர்ணனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். ஐபிஎல் போட்டிகள் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, பொங்காலி மொழிகளில் அந்ததந்த மொழிப் புலமை வாய்ந்தவர்களால் வர்ணனை செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டில் புதிதாக குஜராத் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக திகழந்த ரவி சாஸ்த்ரி தற்போது மீண்டும் வர்ணனை பக்கம் திரும்புகிறார். அதேபோல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடாத நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லா, தவால் குல்கர்னி, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரும் வர்ணனையாளராக அறிமுகமாக உள்ளனர். அதேபோல் ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான தொகுப்பாளியாக திகழ்ந்த மயந்தி லாங்கர் பின்னியும் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த சீசனில் தொகுத்து வழங்க உள்ளார்.
ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் மனதில் நெருக்கமாக்கி கொள்ள ஒன்பது மொழிகளில் இந்தப் போட்டியானது வர்ணனை செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு புதிதாக குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்க்கப்பட்டுள்ளதால், குஜராத்தி மொழி ரசிகர்களை கருத்தில் கொண்டு அந்த மொழியிலும் வர்ணனை செய்யப்படுகிறது. குஜராத்தி நடிகரும், பாடகருமான தவநித் தாகேர், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நயன் மோங்கியா, மன்பிரித் ஜூனேஜா ஆகியோர் குஜராத்தி மொழியில் வர்ணனை செய்யவுள்ளனர்.
இதையடுத்து வர்ணனை பணிக்கு மீண்டும் திரும்பியது பற்றி ரவி சாஸ்த்ரி கூறும்போது, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வர்ணனை அறைக்கு மீண்டும் திரும்ப இருப்பது உற்சாகமாக உள்ளது. உலகின் புகழ்பெற்ற லீக் தொடரான டாடா ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்வதற்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புதுமையான தொழில்நுட்பத்துடன் சிறந்த அனுபவத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தருகிறது. தொலைதூரத்தில் இருந்தவாறு ரசிகர்கள் மற்றும் வீரர்களுடன் உரையாற்றுவதற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளேன் என்றார்.
முதல் முறையாக வர்ணனை கோட் மாட்டியிருக்கும் சுரேஷ் ரெய்னா இந்தியில் வர்ணனை மேற்கொள்ளவுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 2008 முதல் ஐபிஎல்-இல் ஒரு அங்கமாக வகிக்கும் நான், தற்போது இத்தொடரில் புதிய அவதாரம் எடுப்பதில் ஆர்வமாக உள்ளேன். கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வர்ணனை பொதுமக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த புதிய பயணத்தை மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்குகிறேன் என்றார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர்களின் மொத்த பட்டியல்
சர்வதேச ஒளிபரப்பு - ஹர்ஷா போக்லே, சுனில் கவாஸ்கர், எல் சிவராமகிருஷ்ணன், புமல்லேலோ மபங்வா, ஐயன் பிஷப், கிரீம் ஸ்மித், கிரீம் ஸ்வான், கெவின் பீட்டர்சன், முரளி கார்த்திக், தீப் தாஸ்குப்தா, அஞ்சும் சோப்ரா, டேனியல் மொரிசன், மோர்னே மார்கெல், சைமன் டெளல், மாத்யூ ஹெய்டன், நிக்கோலஸ் நைட், ரோஹன் கவாஸ்கர், ஆலன் வில்கின்ஸ், டபில்யூவி ராமன், டேரன் கங்கா
இந்த மற்றும் ஆங்கிலம்: ஜடின் சப்ரூ, மயந்தி லாங்கர் பின்னி, தன்யா புரோஹித், ஆனந்த் தியாகி, நெரோலி மெடோஸ், சுரேன் சுந்தராம், ஆகாஷ் சோப்ரா, நிகில் சோப்ரா, இர்பான் பதான், ஹர்பஜன் சிங், ரவி சாஸ்த்ரி, சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லா, முகமது கைஃப், தவால் குல்கர்னி
தமிழ்: பாவனா பாலகிருஷ்ணன், முத்துராமன் ஆர், ராதாகிருஷ்ணன் சீனிவாசன், கேவி சத்யநாராயணன், ஆர்ஜே பாலாஜி, விஷ்ணு ஹரிகரன், எஸ் பத்ரினாத், அபிநவ் முகுந்த், கே ஸ்ரீகாந்த், யோமகேஷ் விஜயகுமார், ஆர் சதீஷ், ரசல் ஆர்னால்டு
தெலுங்கு: விந்தியா விஷாகா எம், எம் ஆனந்த் ஸ்ரீ கிருஷ்ணா, கெளசிக் என்சி, ஆர் ஸ்ரீதர், எம்எஸ்கே பிரசாத், வேனுகோபால் ராவ் யாலகா, கல்யாண் கிருஷ்ணன், கல்யாண் கொல்லராபு, ஆஷிஷ் ரெட்டி, டி சுமன்
கன்னடம்: மது மைலன்கோடி, ரீனா டிசெளசா, கிரண் ஸ்ரீனிவாசா, சுமேஷ் கோனி, ஸ்ரீனிவாச மூர்த்தி, விஜய் பரத்வாஜ், பரத் சிப்லி, அகில் பாலசந்த்ரா, பவன் தேஷ்பாண்டே, வெங்கடேஷ் பிரசாத், வேதா கிருஷ்ணமூர்த்தி
மராத்தி: குணால் டத்தே, பிரசன்னா சந்த், சைத்தன்யா சந்த், சிநேகன் பிரதான், வினோத் காம்ளி, சந்தீப் படில், அமோல் மஸும்தார்
பெங்காலி: சஞ்சீப் முகர்ஜி, ஆர்ஆர் வருண் கெளசிக், சாராதிந்கு முகர்ஜி, ஜாய்தீப் முகர்ஜி, சௌராசிஷ் லஹிரி
மலையாளம்: விஷ்ணு ஹரிஹரன், ஷியாஸ் முகமது, டினு யோகானன், ராய்ப்பி கோமெஸ், சிஎம் தீபக்
குஜராத்தி: கரண் மேஹ்தா, மனன் தேசாய், தவநித் தாகேர், ஆகாஷ் திரிவேதி, மன்பிரித் ஜூனேஜா, நயன் மோங்கியா