IPL 2022: மார்ஷுக்கு மாற்றாக இந்திய வீரர்! பஞ்சாப் அணியில் அகர்வால் ரிட்டன்ஸ்
Apr 20, 2022, 08:23 PM IST
டெல்லி அணியில் கொரோனா பாதிப்புக்குள்ளான மிட்செல் மார்ஷுக்கு மாற்று வீரராக இந்திய பேட்ஸ்மேன் சர்ப்ரஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் பெருவிரல் காயம் சரியாகி பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயங்க் அகர்வால் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், அந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஐபிஎல் 15வது சீசனின் 32வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை பார்போர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. புணே எம்சிஏ ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த இந்தப் போட்டி டெல்லி அணி வீரர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்பட்ட கோவிட் பாதிப்பு காரணமாக மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், பெளலிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணி ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் அவருக்க பதிலாக மாற்று வீரராக இந்திய பேட்ஸ்மேன் சர்ப்ரஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் பஞ்சாப் அணியில் சிறப்பாக ஆடி வந்த ஓடியன் ஸ்மித்துக்கு பதிலாக நாதன் எல்லிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மயங்க் அகர்வால் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட பிராப்சிம்ரன் சிங் மீண்டும் டக்அவுட்டில் அமர வைக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளும் தங்களின் கடைசி போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் 8வது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தங்களது இடத்திலிருந்து முன்னேறும். குறிப்பாக நல்ல ரன்ரேட்டுடன் 6 புள்ளிகள் பெற்று பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 4 அல்லது 5 இடத்துக்கு செல்லலாம்.
அதேபோல் டெல்லியும் ஆரோக்கியமான ரன்ரேட் வைத்திருப்பதால் இந்தப் போட்டியில் ஜெயித்தால் 6வது இடத்துக்கு முன்னேறலாம். முன்னாள் டெல்லி வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான ககிசோ ரபாடா, பஞ்சாப் அணியில் விளையாடுவதால் அவரது பெளலிங் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அணியில் நன்றாக பேட் செய்து வந்த இலங்கை பேட்ஸ்மேன் பனுக்கா ராஜபக்ஷேவுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ தொடர்ந்து பேட்டிங்கில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார். அணியில் சேர்க்கப்பட்டதற்கு நியாயம் அளிக்கும் விதமாக பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் சொதப்பி வருகிறார். இவரைப் போல் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த ஓடியன் ஸ்மித்துக்கு பதிலாக எல்லிஸ் முதல் போட்டியில் விளையாடுகிறார். எனவே ஸ்மித் மீது இருந்த எதிர்பார்ப்பு இயல்பாகவே எல்லிஸ் மீது ஏற்பட்டுள்ளது. இவர்கள் தவிர வின்னிங் காம்பினேஷனை மாற்றாமல் பஞ்சாப் அணி தொடர்ச்சியாக விளையாடி வருகிறது.
டெல்லி அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றி அணியின் ஆலோசகர் ரிக்கி பாண்டிங் கூறும்போது, "மிட்செல் மார்ஷ்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் எங்களது அன்றாட திட்டத்தில் சில தடங்கல் ஏற்பட்டுள்ளது. எங்களது பயிற்சியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் போட்டிக்கு சரியான முறையில் நாங்கள் தயார் ஆகவில்லை என்பதே உண்மை. மாற்று வீரர்களை பயன்படுத்தி, நேர்மறையான எண்ணங்களுடன்
களமிறங்குவது, மிகப் பெரிய தொடரில் சிறந்த அணியாக இருக்கிறோம் என்பதை மனதில் வைத்து விளையாடுவது என இரண்டு வாய்ப்புகள் மட்டுமே எங்களிடம் உள்ளது. வார்னர், ரிஷப் பண்ட், முஸ்தபிகுர் ரஹ்மான் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்த மைதானத்தில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம்" என்றார்.
இரு அணிகளின் விவரம்:
பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ, லியம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ககிங்சோ ரபாடா, ராகுல் சஹார், வைபர் அரோரா, ஹர்ஸ்தீப் சிங், நாதன் எல்லிஸ்
டெல்லி கேபிடல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், சர்ப்ரஸ் கான், லலித் யாதவ், ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முஸ்தபிகும் ரஹ்மான், கலீல் அஹமத்