Bhavani Devi: 'இதுவரை யாராலும் சாதிக்க முடியாததை சாதித்த பவானி தேவி'
Jun 20, 2023, 06:05 AM IST
Asian Fencing Championships: “இந்திய வாள்வீச்சுக்கு இது மிகவும் பெருமையான நாள். இதுவரை யாராலும் சாதிக்க முடியாததை பவானி சாதித்துள்ளார்.”
வாள்வீச்சு போட்டியில் ஆசிய அளவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி.
ஆசிய சாம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோல்வியடைந்ததன் மூலம் 3வது இடத்தைப் பிடித்து இச்சாதனையைப் பதிவு செய்தார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவரான பவானி தேவி, தமிழகத்தைச் சேர்ந்தவர். சீனாவின் வூக்ஸியில் நடந்த ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உஸ்பெகிஸ்தான் வீராங்கனை ஜைனாப் தயிபெகோவாவிடம் 14-15 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றார் பவானி தேவி.
பவானி தேவி, முன்னதாக காலிறுதியில் உலக சாம்பியனான ஜப்பானின் மிசாகி எமுராவை 15-10 என்ற கணக்கில் வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். அரையிறுதிக்குள் நுழைந்தாலே தோற்றாலும் ஜெயித்தாலும் பதக்கம் உறுதி.
பவானியின் வரலாற்று சாதனைக்கு இந்திய வாள்வீச்சு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா வாழ்த்து தெரிவித்தார்.பவானியின் வரலாற்று சாதனைக்கு இந்திய வாள்வீச்சு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா வாழ்த்து தெரிவித்தார்.
"இந்திய வாள்வீச்சுக்கு இது மிகவும் பெருமையான நாள். இதுவரை யாராலும் சாதிக்க முடியாததை பவானி சாதித்துள்ளார். மதிப்புமிக்க ஆசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை இவர்தான்" என்றார் மேத்தா.
ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற பவானி தேவி, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ரவுண்ட் 32இல் வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பவானி தேவியின் பயணம்
ஆகஸ்டு 27, 1993ம் ஆண்டு பிறந்தார். 2003 ஆம் ஆண்டில் இருந்து இவர் வாள்வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இவர் சென்னையில் உள்ள முருகா தனுஷ்கோடி பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். 2004 ஆம் ஆண்டில் பள்ளி அளவிலான வாள்வீச்சு போட்டியில் கலந்து கொண்டார். இவருக்கு 14 ஆம் வயதாக இருக்க்கும் போது தனது முதல் சர்வதேச போட்டியில் கலந்துகொண்டார்.
இவருக்கு மத்திய அரசு அர்ஜுனா விருதும் வழங்கி கவுரவித்தது.
ஒழுக்கம், அர்ப்பணிப்பு, தீர்மானம் ஆகியவற்றை கொண்டிருந்தால் நீங்கள் வாள்வீச்சில் சாதிக்கலாம் என்கிறார் இந்த வீரமங்கை.
வெண்கலம் வென்றதன் மூலம் எனது தாய்நாட்டுக்காக இன்னும் வாள்வீச்சில் சாதித்து பெருமை தேடி தர முடியும் என்று டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார் பவானி தேவி.
வாள்வீச்சில் சாதனை படைத்துவரும் தமிழ் பெண் பவானி தேவிக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் வாழ்த்துகள்!
டாபிக்ஸ்