IND vs WI 3rd Day: களத்தில் ஜடேஜா-கோலி: உணவு இடைவேளையின்போது இந்தியா 250 ரன்கள் முன்னிலை!
Jul 14, 2023, 10:17 PM IST
இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், 171 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி 3 நாளில் உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்புக்கு 400 ரன்கள் குவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து இருந்தது. 162 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது.
இந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் ஷர்மா இணைந்து 229 ரன்கள் எடுத்தனர். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வீரேந்தர் ஷேவாக் - வாசிம் ஜாபர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக எடுத்து 159 ரன்களே சிறந்த பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.
இந்த சாதனையை யஷஸ்வி - ரோஹித் ஜோடி முறியடித்துள்ளது. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் முதல் முறையாக 200+ பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது.
பின்னர், 3வது நாளை தொடங்கியதும் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 221 பந்துகளில் 103 ரன்களை குவித்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து களம் புகுந்த சுப்மன் கில் 6 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர், வந்த விராட் கோலி, யஷஸ்விக்கு தோள் கொடுத்தார். ஆனால், 171 ரன்கள் எடுத்திருந்தபோது அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் கேட்ச் ஆனார் யஷஸ்வி.
இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டமிழந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அப்போது கோலி தட்டிக் கொடுத்தார்.
அவர் 387 பந்துகளில் 171 ரன்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து வந்த ரஹானே 3 ரன்களில் நடையைக் கட்டினர். இதையடுத்து ஆல்-ரவுண்டர் ஜடேஜா களம் புகுந்தார்.
கோலி-ஜடேஜா இணைந்து விளையாடி வருகின்றனர்.
இந்திய அணி உணவு இடைவேளையின் போது 142 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 400 ரன்களை எடுத்துள்ளது. 250 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக, டெஸ்டில் 8500 ரன்களுக்கு மேல் குவித்த 6வது இந்திய வீரர் ஆனார் கோலி. 21 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கின் 8503 ரன்கள் என்ற சாதனையையும் முறியடித்த கோலி, தற்போது டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.
டாபிக்ஸ்