Asian Games 2023: 72 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறை..100 பதக்கங்களை குவித்து சாதனை படைத்த இந்தியா!
Oct 07, 2023, 08:46 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை நிகழ்த்தி இருக்கிறது.
சீனாவின் ஹாங்சு நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 23-ல் தொடங்கியது. 45 நாடுகளை சேர்ந்த 12,000 பேர் பங்கேற்று வருகின்றனர். இதில், இந்தியா சார்பில் 655 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று 15-வது நாளாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பெண்கள் கபடி இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 26-25 என்ற புள்ளி கணக்கில் சின தைபே அணியை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கத்தை வென்றது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியாவுக்கு 100வது பதக்கம் கிடைத்துள்ளது.
முன்னதாக, இன்றைய ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் தங்கபதக்கம் வென்று அசத்தினார். தென் கொரிய வீராங்கனையை 149-145 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கபதக்கத்தை ஜோதி வென்றுள்ளார்.இந்திய வீரர் ஒஜாஸ் டியோடாலே 148 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மா 147 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் 72 ஆண்டு கால ஆசிய விளையாட்டு வரலாற்றில், இந்தியா முதல்முறையாக 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் அதிகபட்சமாக 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 70 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்