T20 World Cup: ஜிம்பாப்வேக்கு எதிராக 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
Nov 06, 2022, 05:56 PM IST
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று (நவ.06) நடைபெற்ற போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் களமிறங்கினர். ரோகித் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோஹ்லி 25 பந்துகளில் 26 ரன்களில் நடையை கட்டினார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகமல் இருந்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். வெஸ்லி (0), சீன் வில்லியம்ஸ் (11), கிரேக் எர்வின் (13), டோனி முன்யோங்கா (5) என சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
ஓரளவுக்கு இந்திய வீரர்களின் பந்துவீச்சுகளை தாக்குப்பிடித்த ரியான் பர்ள் 35 ரன்களும், சிக்கந்தர் ராஸா 34 ரன்களும் எடுத்து பெவுலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகியதால் ஜிம்பாப்வே அணி 17.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, ஷமி தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்குமார், அர்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
டாபிக்ஸ்