World University Games 2023: உலக பல்கலைக்கழக விளையாட்டு; 5-வது தங்கம் வென்றது இந்தியா!
Jul 31, 2023, 10:06 AM IST
சீனாவில் நடைபெற்று வரும் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் இந்தியா 5-வது தங்கம் வென்று அசத்தியுள்ளது.
சீனாவின் செங்டு நகரில் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நேற்று முன்தினம் (ஜூலை 29) தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நாள் போட்டிகளில் அசத்திய இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்றைய சுற்று போட்டிகளிலும் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்கள்.
இரண்டாம் நாளான நேற்று வில்வித்தையில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய அணியின் சார்பில் அமன் சைனி, பிரகதி ஜோடி தங்கம் வென்றது. இந்த ஜோடி 157-156 என்ற கணக்கில் தென் கொரிய ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு நேற்று 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்கள் கிடைத்தன. இதுவரை 5 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
முன்னதாக, காம்பவுண்ட் மகளிர் அணிகள் பிரிவில் பூர்வஷா, பிரகதி, அவ்னீத் அடங்கிய கூட்டணி 224-229 என தென் கொரியாவிடம் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கம் வென்றது. அதிலே ஆண்கள் அணிகள் பிரிவில் சங்கம்பிரீத் பிஸ்லா, அமன் சைனி, ரிஷப் யாதவ் ஆகியோர் இணைந்து 229-225 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தனர்.
மகளிர் ரீகர்வ் அணிகள் பிரான்ஸை வீழ்த்தி வெண்கலம் வென்றிருந்தது. துப்பாக்கி சுடுதலில் ஆண்கள் தனிநபர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 461.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் ஆண்கள் அணிகள் பிரிவில் விஜய்வீர் சித்து, ஆதர்ஷ் சிங், உதய்வீர் சித்து கூட்டணி 1729 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தை வென்றது. அதிலே ஆண்கள் பிரிவில் ஐஸ்வரி பிரதாப், சூர்ய பிரதாப், சர்ஜாத் சிங் அடங்கிய அணி வெண்கலம் வென்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்