IND vs WI 3rd T20: 360 டிகிரியில் ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ்! வர்மா அதிரடி பினிஷிங்கில் இந்தியா முதல் வெற்றி
Aug 08, 2023, 11:52 PM IST
ஒரு நாள், டி20 என தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வந்த சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான பாணியில் 360 டிகிரியில் விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா முதல் வெற்றியை பெற்றதுடன், தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்தும் தப்பித்தது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், கட்டாய வெற்றியை பெற்றாக வேண்டிய நிலையில் இந்தியா இன்றைய போட்டியில் களமிறங்கியது.
இதையடுத்து டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, கேப்டன் ரோவ்மன் பவல் அதிரடியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இது இந்த தொடரில் அடிக்கப்பட்ட முதல் இரண்டு போட்டிகளை விட அதிகபட்ச ஸ்கோராகும்.
இதைத்தொடர்து 160 ரன்கள் சேஸ் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க பேட்ஸ்மேன்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1, சுப்மன் கில் 6 என அடுத்தடுத்து அவுட்டாகி சொதப்பலான தொடக்கத்தை தந்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலித்த ஜெய்ஸ்வால், டி20 போட்டியில் ஏமாற்றினார். அதேபோல் மூன்று ஒரு நாள், இரண்டு டி20 போட்டிகளில் சொல்லிக்கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத சூர்யகுமார் யாதவ் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடினார். தனது வழக்கமான பாணியில் 360 டிகிரியில் ரன் குவிப்பில் ஈடுபட்ட அவர் அரைசதம் அடித்ததுடன் 83 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
சூர்யகுமார் யாதவ் அதிரடியால் இந்தியாவின் சேஸ் எளிதானது. இவர் அவுட்டான பிறகு அதிரடியை தொடர்ந்த திலக் வர்மா 49 ரன்கள் அவுட்டாகாமல் இருந்தார்.
வெற்றிக்கான இலக்கை 17.5 ஓவரில் இந்திய அணி எட்டி, டி20 தொடரில் முதல் வெற்றியை பெற்றது. அத்துடன் தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்தும் இந்திய அணி தப்பித்துள்ளது.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 20 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் இருந்தார். இந்தியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது.
அதிரடியாக பேட் செய்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி20 போட்டி அமெரிக்காவில் உள்ள லாண்டர்ஹில் மைதானத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்