ICC: இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் கேப்டன்கள் செய்த தவறு! ஐசிசி அபராதம் விதிப்பு
Aug 05, 2023, 10:59 AM IST
டி20 தொடரில் விளையாடி வரும் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இருஅணி கேப்டன்கள் செய்து தவறுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. தற்போது 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசாமல் தாமதமாக பந்து வீசியதாக இந்தியா கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஓவர் வீசியிருக்க வேண்டிய நேரத்தில் ஒரு ஓவர் குறைவாக வீசியதற்காக இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியதால் அந்த அணி கேப்டன் ரோவ்மேன் பவலுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி எலைட் குழுவை சேர்ந்த போட்டி ரெஃப்ரியான ரிச்சி ரிச்சர்ட்சன் இந்த அபராதத் தொகையை விதித்துள்ளார்.
வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதியின் பிரிவு 2.22 குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த ஓவர்கள் வீசுவது தொடர்பான குற்றத்தை இரு அணி கேப்டன்களும் ஒப்புக்கொண்டனர். அத்துடன் குறித்த நேரத்தில் பந்து வீசாத காரணத்துக்காக அணியை சேர்ந்த ஒவ்வொரு வீரர்களுக்கும் 5 சதவீதம் போட்டி ஊதியத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் இரண்டாவது டி20 போட்டி புராவிடென்ஸ் மைதானத்தில் நாளை இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்