HT Sports Special: இதே நாள், இதே இடம்! முதல் முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்ட இரு அணிகள்
Jun 21, 2023, 06:20 AM IST
முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட்இண்டீஸ் அணியும், டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்று பாகிஸ்தான் அணி முதல் முறையாக இதே நாளில் தான் சாம்பியன் ஆனது. இந்த இரண்டு தொடர்களும் இங்கிலாந்தில் தான் நடைபெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ஒரு நாள் போட்டிகளாக மாறிய பின்னர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 1975ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற நிலையில் அப்போது ஜாம்பவான் அணியாக திகழ்ந்த வெஸ்ட்இண்டீஸ் மற்றும் மற்றொரு டாப் அணியான ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் விளையாடின.
இதே நாளில் 1975இல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று முதல் உலகக் கோப்பையை முத்தமிட்டது. என்னதான் மற்ற அணிகளை அச்சுறுத்தும் பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்திருந்தாலும் இந்த வெற்றி அவர்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய போட்டியானது இரவு 8.43 மணிக்கு நிறைவடைந்துள்ளது. ஒரு நாள் கிரிக்கெட்டில் மிக நீண்ட நேரம் விளையாடப்பட்ட போட்டியாகவே இது அமைந்தது.
உலகப் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிளைவ் லாய்டின் சதத்தால் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. லாய்ட் அதிகபட்சிமாக 102 ரன்கள் எடுத்தார்.
இதை சேஸ் செய்த ஆஸ்திரேலியாவுக்கு வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களும், பீல்டர்களும் நல்ல நெருக்கடி கொடுத்தனர். அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ஆலன் டர்னர், அயன் சேப்பல், கிரேக் சேப்பல் ஆகியோரை ரன்அவுட் செய்தார் விவன் ரிச்சர்ட்ஸ். பேட்டிங்கில் வெறும் 5 ரன்கள் மட்டும் எடுத்து சொதப்பிய ரிச்சர்ட்ஸ் பீல்டிங்கில் நன்கு கை கொடுத்தார்.
233 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி தோல்வியின் விழிம்புக்கு சென்றபோது, கடைசி விக்கெட்டுக்கு ஜெஃப் தாம்சன், டென்னிஸ் லில்லீ ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து லேசாக நம்பிக்கை கொடுத்தனர்.
233 ரன்களில் இருந்து 41 ரன்கள் கூடுதலாக சேர்த்து அணியின் ஸ்கோரை 274 என உயர்த்தினர். ஆனால் ஆஸ்திரேலியா அணியின் 5வது ரன்அவுட்டாக தாம்சன் 21 ரன்களில் அவுட்டாக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் வசமானது. இந்த ஆட்டத்தில் மட்டும் 5 ஆஸ்திரேலியயா வீரர்கள் ரன் அவுட்டானார்கள்.
கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி கிளைவ் லாய்ட் உலகக் கோப்பையும், ஆட்ட நாயகன் விருதையும் தட்டி சென்றார்.
இந்த கோப்பைக்கு பிறகு 1979 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற வெஸ்ட்இண்டடீஸ், அதன் பிறகு தற்போது வரை ஒரேயொரு முறை மட்டும் இறுதிப்போட்டி வரை தகுதி பெற்றது.
லாகூரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மூன்று மாதங்கள் கழித்து இலங்கை - பாகிஸ்தான் அணி இரண்டாவது டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்கிறது. கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லார்ட்ஸில் தான் இந்த இறுதிப்போட்டியும் நடைபெற்றது.
ஏற்கனவே முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்று இந்தியாவுக்கு எதிராக வெற்றியை கடைசி நேரத்தில் கோட்டை விட்ட துயரத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, இரண்டாவது உலகக் கோப்பையிலும் இறுதிக்கு தகுதி பெற்று கோப்பை வெல்லும் வாய்ப்பு உருவானது. இந்த முறை மற்றொரு ஆசிய அணியாக இலங்கை எதிராக விளையாடும் சூழ்நிலை உருவானது. லீக் சுற்றில் இந்த இரண்டு அணிகளும் சிறப்பாக செயல்பட்ட அணியாகவே இருந்தன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் சங்ககாரா மட்டும் பொறுப்பாக பேட் செய்த 64 ரன்கள் அடிக்க, இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களே குவித்தது.
மிகவும் குறைவான இலக்கு என்றாலும் பாகிஸ்தான் அணிக்கு இலங்கை பவுலர்கள் ஆரம்பத்தில் நெருக்கடி கொடுக்க முயற்சித்தனர். இருப்பினும் பாகிஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி தனது அதிரடியை வெளிப்படுத்தி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
இதனால் அரைசதம் அடித்ததோடு 18.4 ஓவரில் அணிக்கு வெற்றியும் தேடி தந்தார். டி20 உலகக் கோப்பை வெல்லும் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன் ஆனது. இந்த போட்டியும் சரியாக 34 ஆண்டுகள் கழித்து இதே நாளில்தான் நிகழ்ந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்