HT Sports Special: ODI-இல் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய இந்திய பந்துவீச்சாளர்கள்!
Jan 24, 2023, 06:00 AM IST
Indian Bowlers: 2020ஆம் ஆண்டிலிருந்து ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய இந்திய வீரர்களின் லிஸ்ட்டை தான் நாம் இந்த சிறப்பு கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.
ந்த வடிவிலான கிரிக்கெட் என்றாலும் மெய்டன் ஓவர்கள் என்பது மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மெதுவாக விளையாடுவார்கள் என்பதால் அதிக மெய்டன் ஓவர்களை பந்துவீச்சாளரால் வீச முடியும்.
ஆனால், ஒரு நாள், டி20 கிரிக்கெட்டில் மெய்டன் ஓவர்களை வீசுவது அரிய சாதனையாகவே கருதப்படுகிறது. குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் மெய்டன் ஓவர் வீசினால், விளையாடிக் கொண்டிருக்கும் அணியின் ஸ்கோர் வெகுவாக குறைந்துவிடும்.
இதனால், அந்த அணி சேஸிங் செய்தாலும், முதலில் பேட்டிங் செய்தாலும் ஒட்டுமொத்த ஸ்கோரை குறைவாகவே எடுக்கும். இப்படி ரன் வேகத்தை கட்டுப்படுத்த கிரிக்கெட்டில் மெய்டன் ஓவர்கள் வீசப்படுவது அவசியமாகும்.
மெய்டன் ஓவர் என்றால் என்ன?
கிரிக்கெட் பார்க்கக் கூடிய அனைவருக்குமே இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்திருக்கும். இருப்பினும், புதிதாக கிரிக்கெட் பார்க்கிறவர்களுக்கு மெய்டன் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மெய்டன் ஓவர் (maiden over) என்பது ஒரு ஓவரில் அனைத்து பந்துகளையும் பந்துவீச்சாளர் டாட் பாலாக வீசுவார். அதாவது, அந்தக் குறிப்பிட்ட ஓவரில் ஒரு ரன் கூட (A ball off which no runs are scored) பேஸ்ட்மேன்கள் எடுத்திருக்க முடியாது. இதைத்தான் மெய்டன் ஓவர் என்று கிரிக்கெட் உலகம் அழைக்கிறது.
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து அதிக மெய்டன் ஓவர்களை ஒரு நாள் கிரிக்கெட்டில் வீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலை பார்ப்போம் வாருங்கள்.
முகமது சிராஜ்
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது முகமது சிராஜ். இவர் மொத்தம் 17 மெய்டன் ஓவர்களை வீசி அசத்தி இருக்கிறார். தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சிராஜ், 1994ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பிறந்தார். இவருக்கு தற்போது 28 வயது ஆகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜனவரி 15 அன்று 2019ஆம் ஆண்டு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார் முகமது சிராஜ்.
இதுவரை 21 ODI (Onde day international) ஆட்டங்களில் விளையாடியுள்ள சிராஜ், மொத்தம் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
1,024 பந்துகளை வீசிய அவர், பெஸ்ட் பவுலிங் ரேட்டாக 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்திருக்கிறார்.
பவுலிங் ஆவரேஜ் 20.73 ஆக உள்ளது. ஐசிசி ஒரு நாள் தரவரிசையில் 685 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார் முகமது சிராஜ். நியூசி., எதிரான தற்போதை ஒரு தொடரின் முதல் ஆட்டத்தில் 2 மெய்டன் ஓவர்களையும், 2வது ஒரு நாள் ஆட்டத்தில் 1 மெய்டன் ஓவரையும் வீசி அசத்தினார்.
ஷர்துல் தாக்குர்
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஷர்துல் தாக்குர். இவர் 2020ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 9 மெய்டன் ஓவர்களை வீசியிருக்கிறார்.
இவர் இலங்கைக்கு எதிராக 2017ஆம் ஆண்டில் ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். சிஎஸ்கேவிலும் கடந்த 2018-2021 வரை விளையாடி இருக்கிறார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் 19 ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 909 பந்துகளை வீசி 25 விக்கெட்டுகளை சுருட்டியிருக்கிறார் ஷர்துல். நக்கில் பால் வீசுவதில் வல்லவர் இந்த ஷர்துல் தாக்குர். நியூசி., எதிரான 2வது ஒரு நாள் ஆட்டத்தில் 1 மெய்டன் ஓவரை வீசினார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா
8 முறை மெய்டன் ஓவர்கள் வீசி இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் ஜஸ்ப்ரீத் பும்ரா. காயம் காரணமாக கடந்த ஓராண்டாக அணியில் இடம்பிடிக்காத நிலையில் தற்போது அவர் உடல்நிலை தேறி வருகிறார்.
ஜனவரி 23,2016இல் ஆஸி., அணிக்கு எதிராக ODI இல் அறிமுகமான பும்ரா, தனித்திறமையுடன் பந்துவீசக் கூடியவர் என்ற பெயரை எடுத்தவர். மொத்தம் 70 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள பும்ரா, 3,703 பந்துகளை வீசி, 119 விக்கெட்டுகளை அள்ளி இருக்கிறார். இவர் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.
பிரசித் கிருஷ்ணா
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த 26 வயது இளம் வீரரான பிரசித் கிருஷ்ணா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் அடியெடுத்து வைத்தார்.
இதுவரை 12 ODI ஆட்டங்களில் விளையாடியிருக்கும் பிரசித் கிருஷ்ணா, 589 பந்துகளை வீசி, 21 விக்கெட்டுகளை தட்டி தூக்கி இருக்கிறார். இதுவரை இவர் 7 மெய்டன் ஓவர்களை வீசி எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தப் பங்களித்துள்ளார்.
இவரது பங்களிப்பு எதிர்வரும் காலங்களில் இன்னும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சுழல் மன்னனான குல்தீப் யாதவ், நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம்பிடித்துள்ளார். இவர் 2017இல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இதுவரை 73 ODI ஆட்டங்களில் விளையாடியுள்ள குல்தீப், 3,480 பந்துகளை வீசியிருக்கிறார். அதில் 122 விக்கெட்டுகளை சுருட்டி அசத்தியிருக்கிறார்.
2020 முதல் தற்போது வரை 6 மெய்டன் ஓவர்களை வீசியிருக்கிறார் குல்தீப். நியூசி.,க்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 8 ஓவர்களை வீசி அதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார்.
ஹர்திக் பாண்டியா
இந்திய அணியை இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் வழிநடத்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 6 மெய்டன் ஓவர்களை வீசி அசத்தியிருக்கிறார்.
அணி சிக்கலான நேரத்தை எதிர்கொண்டிருக்கும்போது பேட்டிங் மட்டுமல்ல, பந்துவீச்சிலும் தனது பங்கலிப்பை வழங்கி அணியை அபாய கட்டத்திலிருந்து மீட்டுக் கொண்டுவர செய்பவர் ஹர்திக்.
29 வயதாகும் ஹர்திக் பாண்டியா, 2016இல் நியூசி.,க்கு எதிரான ஒரு நாள் தொடரில் தான் அறிமுகமானர். இதுவரை 66 ODI ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், மொத்தம் 2,632 பந்துகளை வீசி 63 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டாபிக்ஸ்