Asia cup 2022: இறுதிப்போட்டியில் இலங்கை! இந்தியாவுக்கான வாய்ப்பு எப்படி?
Sep 07, 2022, 01:43 PM IST
ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இந்திய இழந்துவிட்டது. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டு இப்போது மற்ற அணிகளின் முடிவுக்காக எதிர்நோக்கும் நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. அதுவும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே இது சாத்தியம்.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டி இந்தியா - இலங்கை இடையே துபாயில் நடைபெற்றது. கடைசி ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில் ஒரு பந்து மீதம் இருக்க இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
"நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணிக்கு தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு ஷாட்களை விளையாட வேண்டும். நீண்ட காலத்துக்கான அணியாக தற்போதுள்ள அணி உள்ளது.
இதுபோன்ற தோல்விகள் ஒரு அணியாக நல்ல பாடம் கற்பிக்க உதவம். பந்தவீச்சில் தொடக்கம் சரியாக அமையாத போதிலும், பினிஷிங் சிறப்பாகவே இருந்தது. ஸ்பின்னர்கள் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. பெரிய பவுண்டரிகள் இருப்பதால் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படமுடியும் என நம்பி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினோம். இதுபோன்ற அழுத்தம் நிறைந்த போட்டிகளில் பல்வேறு பதில்கள் கிடைக்கும்" என்று கேப்டன் ரோஹித் ஷர்மா போட்டி முடிந்த பின்பு கூறினார்.
பாகிஸ்தானிடம் வெளிப்படுத்திய அதே சொதப்பலான ஆட்டத்தை மீண்டும் இலங்கையிடமும் தொடர்ந்துள்ளது. கட்டாய வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தில் தோல்வியடைந்திருப்பதால் இறுதி போட்டிக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது.
இந்தியா இனியும் இறுதி செல்வதற்கான வாய்ப்பாக பேப்பர் போனாவை எடுத்து கணக்கு போட்டு பார்த்ததில் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிதான் தோற்கடிக்க வேண்டும். இதன் பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வெல்வதோடு மட்டுமில்லாமல் நல்ல ரன் ரேட்டையும் வைத்திருக்க வேண்டும்.
இவற்றோடு இந்த கணக்கு முடியவில்லை. சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியான இலங்கை - பாகிஸ்தான் போட்டியில் இலங்கை வெல்ல வேண்டும். இவை எல்லாம் நடந்தால் தலா ஒரு வெற்றிகளை பெற்ற மூன்று அணி சிறந்த அணி இறுதிப்போட்டி செல்லும் வாய்ப்பை பெறும்.
இந்தியா இறுதிக்கு செல்ல வேண்டுமானால் இவ்வளவு விஷயங்களும் நடக்க வேண்டும். ஆனால் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெல்லும் பட்சத்தில் அந்த அணி நேரடியாக இறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெறும். இதனால் இந்த ஆட்டங்களுக்கு அடுத்தப்படியாக நடைபெறவிருக்கும் போட்டிகள் வெறும் சம்பிரதாயமாகவே நடைபெறும்.
அதிலும் இலங்கை - பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் ஒரு முறையும், பின்னர் மீண்டும் இறுதிப்போட்டியிலும் சந்திக்க நேரிடும்.
இந்தியாவின் சொதப்பல்கள்
டாஸ் வின்ஸ் மேட்சஸ் என்பதுபோல் ஐக்கிய அரபு அமீரகத்தில் டாஸ் வெற்றி பெற்றாலே ஆட்டத்தை வெற்றி பெற்று விடலாம் என்கிற நம்பிக்கை அணிகளிடையே உருவாகியுள்ளது. அதற்கு காரணமாக இலக்கு நிர்ணயப்பதை விட,. அதை சேஸ் செய்வது எளிது என அணிகள் கருதுவதோடு, அங்கு நடைபெற்ற சமீபத்திய போட்டிகளில் பெரும்பாலானவை இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெறும் என்கிற ரொக்கார்டு தொடர்ந்து வருகிறது.
டாஸ் தோற்பது குற்றமில்லை என்றாலும் அந்த ஆட்டத்துக்கு என்ன தேவையோ அதை அணியினர் சரியாக கொடுக்க தவறினால் தோல்வி நிச்சயம்தான். இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி வீரர்கள் செயல்பாடே தோல்வி முழு காரணமாக அமைந்தது.
பந்து மெதுவாக பேட்டை நோக்கி வருமாறு அமைந்து இருந்த ஸ்லோ பிட்சில் கேப்டன் ரோஹித் ஷர்மாக தவிர வேறும் யாரும் சிறப்பாக பேட் செய்யவில்லை. இந்தியாவின் மிடில் ஆர்டர் சொதப்பல் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அடித்த பாண்ட்யா அதற்கு அடுத்து பெரிதாக சோபிக்கவில்லை.
ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் தொடர்ந்து மூன்றாவது முறையாக 20 ரன்களை கூட கடக்காமல் பேட்டிங்கில் சொதப்பினார். அதுமட்டுமல்லாமல் கடைசி ஓவரில் பைஸ் மூலம் தான் இலங்கை வென்றது. அர்ஷிதீப் வீசிய கடைசி ஓவரின் 5வது பந்தை பீட்டன் செய்த ஷனக, பைய் ஓடினர். இதுபோன்ற தருணங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து த்ரோ செய்ய வேண்டிய நிலையில், சரியாக ஸ்டம்புகளில் எரிய முடியாமல் தவறவிட்டார் பண்ட்.
இதுபோன்ற தருணங்களில் தோனியிடம் மட்டுமல்ல, முன்னாள் விக்கெட் கீப்பர்களான ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட், தென் ஆப்பரிக்காவின் மார்க் பெளச்சர் ஆகியோரிடமிருந்தும் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சில் ஸ்டம் அருகே கீப்பங் செய்ய பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவரை ஓபனராகவும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் களமிறக்கப்பட்ட தீபக் ஹூடாவை பினிஷராக கடைசி நேரத்தில் இறக்கியது கைகொடுக்காமல் போனது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக 180 ரன்கள் மேல் எடுத்தே நல்ல ஸ்கோர் என நினைத்தது தவறு என்று கேப்டன் ரோஹித் சொன்னார். ஆனால் இலங்கைக்கு எதிரான போட்டியில் 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் அதற்கு ஏற்ப கட்டுக்கோப்பான பந்து வீச்சு இல்லாமல் பவர்ப்ளே ஓவர்களின் ரன்களை வாரி வழங்கினர் இந்திய வேகப்பந்து பெளலர்களான புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.
பந்து வீச்சில் ஏற்கனவே ஒரு வேகப்பந்து வீச்சாளர் குறைவான நிலையில், ஆறாவது பெளலிங் ஆப்ஷனாக ஹூடா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் கடைசி வரை அவருக்கு ஒரு ஓவர் கூட வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பவர்ப்ளே ஓவரில் கைமீறி போன ஆட்டத்தை மிடில் ஓவரில் ஸ்பின்னர்கள் கட்டுப்படுத்தி நெருக்கடி கொடுத்தனர். ஆனால் கடைசி கட்ட ஓவர்கள் மீண்டும் மோசமான பந்து வீச்சில் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்புகளை வாரி வழங்கினர்.
மொத்தத்தில் அனைத்து வகைகளிலும் சொதப்பல்களை வெளிப்படுத்தியதன் விளைவாக இந்த இரு தோல்விகள் அமைந்துள்ளது. உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணியின் இந்த தோல்வி பாடமாக அமைந்திருப்பதோடு, வீரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.