HT Sports Spl: டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும் விளையாடிய வீரர்கள் லிஸ்ட் இதோ..!
Aug 01, 2023, 06:50 AM IST
Test Cricket: இந்தச் சாதனையை நிகழ்த்திய இரண்டாவது ஆஸி., வீரர் உஸ்மான் கவாஜா. கிம் ஹியூஸ் இச்சாதனையை நிகழ்த்திய முதல் ஆஸி., வீரர் ஆவார்.
டெஸ்ட் கிரிக்கெட் என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) முழு உறுப்பு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளுக்கு இடையில் சர்வதேச அளவில் விளையாடப்படும் முதல் தர கிரிக்கெட்டின் ஒரு வடிவமாகும் என்பதை நாம் அறிவோம்.
ஒரு போட்டி நான்கு இன்னிங்ஸ்கள் (ஒரு அணிக்கு இரண்டு) மற்றும் ஐந்து நாட்கள் வரை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில், சில டெஸ்ட் போட்டிகள் நேர வரம்பு இல்லாமல் இருந்தன. அவை காலத்தால் அழியாத டெஸ்ட்கள் என்று அழைக்கப்பட்டன. "டெஸ்ட் மேட்ச்" என்ற சொல் முதலில் 1861-62 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
கால ஓட்டத்தில் ஒரு நாள் கிரிக்கெட், 20 ஓவர் கிரிக்கெட், ஏன் 10 ஓவர் கிரிக்கெட் கூட வந்துவிட்டது.
ஆனாலும் டெஸ்ட் நிலைத்து நிற்பதற்கு காரணம் அதை கிரிக்கெட் வீரர்கள் பெரிதும் விரும்புவதும், டெஸ்ட் என்பதே வீரர்களின் திறமையை சோதிப்பதற்கான விளையாட்டாக இருப்பதாலும்தான்.
இந்த டெஸ்டில் இரு இன்னிங்ஸ்களில் 5 நாட்கள் விளையாடிய வீரர்கள் இருக்கிறார்கள். இது போன்ற அரிய சாதனை படைத்தவர்கள் பட்டியலில் சமீபத்தில் ஆஸி., வீரர் உஸ்மான் கவாஜா இணைந்தார்.
இந்தச் சாதனையை நிகழ்த்திய இரண்டாவது ஆஸி., வீரர் உஸ்மான் கவாஜா. கிம் ஹியூஸ் இச்சாதனையை நிகழ்த்திய முதல் ஆஸி., வீரர் ஆவார்.
அவர் 1980இல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தான் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். தற்போது கவாஜாவும், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தான் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
இதுவரை மொத்தம் 13 வீரர்கள் இச்சாதனை பட்டியலை அலங்கரிக்கின்றனர்.
அத்தகைய வீரர்களின் லிஸ்ட்டை பார்ப்போம்.
இந்தச் சாதனையை முதலில் நிகழ்த்தியவர் இந்திய வீரர்தான். அவர் பெயர் எம்.எல்.ஜெய்ம்சிம்மா. கொல்கத்தாவில் 1960 ஆண்டு ஜனவரி 23 முதல் 28 வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இச்சாதனையை படைத்தார்.
முதல் இன்னிங்ஸில் 20 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். அடுத்த இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்தார்.
அடுத்து இந்தப் பட்டியலில் இருப்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜியோஃப் பாய்காட். 1977ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
மூன்றாவது இடத்தில் ஆஸி.,யைச் சேர்ந்த கிம் ஹியூஸ், அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலன் லாம்ப் ஆகியோர் உள்ளனர்.
5வது இடத்தில் இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி உள்ளார்.
அட்ரியன் கிரிஃபித்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), ஆன்ட்ரு ஃபிளின்டாஃப் (இங்கிலாந்து), அல்விரோ பீட்டர்சன் (தென்னாப்பிரிக்கா), சதேஸ்வர் புஜாரா (இந்தியா), ரோரி பர்ன்ஸ் (இங்கிலாந்து), கிரெய்க் பிராத்வைட் (வெஸ்ட் இண்டீஸ்), டி.சந்திரபால் (வெஸ்ட் இண்டீஸ்), உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா).
இந்த லிஸ்டில் உள்ளவர்கள் டெஸ்டில் 5 நாட்களிலும் ஒரு பந்தையாவது எதிர்கொண்டு விளையாடியவர்கள் ஆவர் என்பது ஸ்பெஷல் ஆகும்.
டாபிக்ஸ்