HBD Nirupama Vaidyanathan: கோவையில் பிறந்து டென்னிஸில் வெற்றி கொடி நாட்டிய வீராங்கனை நிருபமா பிறந்த நாள் இன்று
Dec 08, 2023, 05:50 AM IST
அவர் தனது 5 வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். அவரது சகோதரரைப் பார்த்து டென்னிஸ் மீது ஆர்வம் கொள்ளத் தொடங்கினார்.
நிருபமா வைத்தியநாதன் இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஆவார். 1998 ஆஸ்திரேலிய ஓபனில், மெயின் டிராவில் இடம்பெற்று விளையாடிய இரண்டாவது இந்திய டென்னிஸ் வீராங்கனை ஆவார். ஆஸி., ஓபனில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார்.
1998 பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் இணைந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதல் 200 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை நிருபமா ஆவார்.
நிருபமா கோயம்புத்தூரில் பிறந்தவர். அவர் தனது 5 வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். அவரது சகோதரரைப் பார்த்து டென்னிஸ் மீது ஆர்வம் கொள்ளத் தொடங்கினார். இவரது தந்தை கே.எஸ். வைத்தியநாதன் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழகத்திற்காக விளையாடிய கிரிக்கெட் வீரர் ஆவார்.
அவரே தொடக்கத்தில் மகளுக்கு பயிற்சி அளித்தார். நிருபமாவின் முதல் டென்னிஸ் போட்டித் தொடர் 12 வயதுக்குட்பட்ட தேசிய போட்டியாகும், அங்கு அவர் அரையிறுதியை அடைந்தார். 13 வயதில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் தனது முதல் தேசிய பட்டத்தை வென்றார்.
ஒரு வருடம் கழித்து 1991 இல், அவர் 14 வயதில் தேசிய மகளிர் பட்டத்தை வென்றார். 1996 இல், அவர் ஐரோப்பிய நாடான லக்சம்பர்க்கிற்கு குடிபெயர்ந்தார், மேலும் அவர் 18 வயதில் தொழில்முறை டென்னிஸுக்கு மாறினார். அக்டோபர் 1996 இன் இறுதியில், SEAT ஓபனில் தனது முதல் WTA-நிலை போட்டியில் விளையாடினார்.
நவம்பர் 17, 1996 இல், நிருபமா தனது முதல் ITF மகளிர் சர்க்யூட் பட்டத்தை வென்றார், ஜெர்மனியின் பேட் கோகிங்கில் $25,000 பரிசுத்தொகை கொண்ட போட்டியின் இறுதிப் போட்டியில் ரலுகா சாண்டுவை தோற்கடித்தார்.
தனது முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியை 1997 ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடினார், அங்கு அவர் யுகா யோஷிதாவிடம் இரண்டாவது தகுதிச் சுற்றில் தோற்றார்.
நிருபமா, 1997 இல் புளோரிடாவில் உள்ள சரசோட்டாவுக்கு இடம் மாறினார், அங்கு லியாண்டர் பயஸின் முன்னாள் பயிற்சியாளரான டேவிட் ஓ மீராவிடம் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.
பிரெஞ்சு, விம்பிள்டன், யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களிலும் விளையாடியிருக்கிறார். ஒலிம்பிக்கில் 2000வது ஆண்டில் முதல் சுற்றுடன் வெளியேறினார்.
அவருக்கு இன்று பிறந்த நாள். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் அவருகக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்!
டாபிக்ஸ்