HT Sports Special: வெஸ்ட் இண்டீஸ் அணி ஹீரோ! கடந்த நூற்றாண்டின் சிறந்த ஆல்ரவுண்டர் - கேரி சோபர்ஸின் அடேங்கப்பா சாதனைகள்
Jul 28, 2023, 06:50 AM IST
கடந்த நூற்றாண்டின் சிறந்த ஆல்ரவுண்டர், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் எதிரணிகளுக்கு ஜாம்பவான் வீரராக மிரட்டியவர் சர் கேரி சோபர்ஸ். கிரிக்கெட் உலகில் பல்வேறு ஆச்சர்யமிக்க சாதனைகளை இவர் புரிந்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக மட்டுமில்லாமல் கடந்த நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பாராட்டுதலுக்கும் உரியவராக இருப்பவர் கேரி சோபர்ஸ். 1954 முதல் 1974 வரை என 20 ஆண்டுகள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய இவர் திறமை வாய்ந்த பவுலர், அதிரடியான பேட்ஸ்மேன், அபாரமான பீல்டர் என முழுமையான கிரிக்கெட்டராக அணியில் இருந்தார். இதன் காரணமாகவே சேபர்ஸை சிறந்த ஆல்ரவுண்டர், சிறந்த கிரிக்கெட்டர் என பலரும் புகழ்ந்து தள்ளினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் ஒன்றான பார்போடாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன் நகரில் பிறந்த இவர் பார்போடாஸ் அணிக்காக தனது 16வது வயதில் இருந்தே முதல் தர கிரிக்கெட்டில் பங்கேற்று வந்துள்ளார். முதல் தர கிரிக்கெட் விளையாடிய அதே ஆண்டிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமானார். ஆரம்பத்தில் அணியில் பவுலராக சேர்க்கப்பட்டார். பின்னர் பேட்டிங் வரிசையில் முன்னேற்றம் செய்யப்பட்டார்.
1958ஆம் ஆண்டு, தனது 21வது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் சதத்தை அடித்தார் கேரி சோபர்ஸ். தனது முதல் சதத்தை முச்சதமாக மாற்றிய அவர் 365 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து கிரிக்கெட் உலகின் புருவத்தை உயர வைத்தார். இது அ்ந்த காலகட்டத்தில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
இவரது இந்த சாதனையானது 1994ஆம் ஆண்டு மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான பிரெய்ன் லாரா 375 ரன்கள் எடுத்து முறியறிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அ்ணியின் கேப்டனாக 1965 முதல்் 1972 வரை செயல்பட்டார் சோபர்ஸ். அத்துடன் 1970இல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ரெஸ்ட் ஆஃப் வேர்ல்டு அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 93 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய சோபர்ஸ், பேட்டிங்கில் 8032 ரன்கள் 57.78 சராசரியுடன், பவுலிங்கில் 235 விக்கெட்டுகள் 34.03 சராசரியுடன் எடுத்து மிரட்டலான ஆல்ரவுண்டராக இருந்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இப்படியென்றால் முதல் தர கிரிக்கெட்டில் 383 போட்டிகள் விளையாடி, 28,314 ரன்கள் எடுத்ததோடு, 1,043 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 86 சதங்கள், 121 அரைசதங்கள், மற்றும் 36 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸரை விளாசிய முதல் வீரர் கேரி சோபர்ஸ் தான். இதற்கு முன்னர் ஒரு ஓவரில் அடித்த அதிகபட்ச ரன் 34 ரன்கள் என்று இருந்தது. 57 ஆண்டுகாலமாக நீடித்து வந்த அந்த சாதனையை முறியடித்தார் சோபர்ஸ்.
சர்வதேச அளவில் ஒரேயொரு ஒரு நாள் போட்டி மட்டும் விளையாடி சோபர்ஸ், பவுலிங்கில் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தியுள்ளார். இடது கை பேட்ஸ்மேனாகவும், இடது கை பவுலராகவும் இருந்தவர் சோபர்ஸ். பவுலிங்கில் பன்முக திறமை கொண்டவராக இருந்த இவர் அடிப்படையில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும், ஸ்பின் பவுலிங்கும் செய்யக்கூடியவராக இருந்துள்ளார். ஸ்பின்னிலும் பேட்ஸ்மேன்களை திணறடித்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
1966-67 இந்திய சுற்றுப்பயணத்தின் போது பாலிவுட் நடிகை அஞ்சு மகேந்த்ருவிடம் காதல் வயப்பட்டார். இவருக்கும், அஞ்சுவுக்கு இடையே நிச்சயதார்த்தம் நிகழ்ந்த நிலையில், திருமணம் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியா பெண்மணியான ப்ரூ கிர்பி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆஸ்திரேலியா குடியுரிமையும் பெற்றார்.
1964ஆம் ஆண்டிலேயே விஸ்டன் கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார் சோபர்ஸ். 2000ஆவது ஆண்டில் நூற்றாண்டின் சிறந்த வீரர் என்ற விருதை பெற்றார். 2004 முதல் ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு கேரி சோபர்ஸ் பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் விளையாட்டின் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படும் விஸ்டன் புத்தகத்தின் 150வது ஆண்டில் சோபர்ஸ் பெயர் ஆல்டைம் டெஸ்ட் வேர்ல்ட் லெவன் அணியில் இடம்பெற செய்தது.
கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் எதிரணிகளுக்கு ஜாம்பவான் வீரராக திகழ்ந்த கேரி சோபர்ஸ்க்கு இன்று 87வது பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்