Argentina Topless Fan: அர்ஜென்டினா வெற்றி; மைதானத்திலேயே மேலாடையை கழற்றிய ரசிகை!
Dec 21, 2022, 09:59 PM IST
கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலின் போது, அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடும் வகையில் அந்நாட்டு ரசிகை ஒருவர் மேலாடையை கழற்றி ஸ்டேடியத்திலேயே கொண்டாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (டிச.18) கத்தாரில் நடந்தது. லுசெய்ல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் உலக ரேங்கில் 3-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினா மற்றும் உலக ரேங்கில் 4-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணிகள் மோதின.
சுமார் மூன்று மணிநேரம் அனல் பறந்த இந்த ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தன் வசமாக்கியது.
இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. அர்ஜென்டினாவின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்திலேயே உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர்.
அர்ஜென்டினா வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மெஸ்சியின் ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே லுசெய்ல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்ற போது, அந்நாட்டு ரசிகை ஒருவர் தனது மேலாடையை கழற்றி சுழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கத்தார் நாட்டு சட்டப்படி பொதுவெளியில் யாரெனும் தங்கள் உடலை நிர்வாணமாக வெளிப்படுத்தினால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும். பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, கத்தார் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
தங்கள் நாட்டின் கலாசாரம் மற்றும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்குமாறும் கால்பந்து ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. மேலும், விளையாட்டு மைதானத்துக்குள் பீர் பாட்டில் எடுத்துச்செல்ல கட்டுப்பாடு விதித்திருந்தது கத்தார்.
குறிப்பாக பெண் ரசிகைகள் ஆடைகளில் ஒழுங்குமுறை என்று புதிய விதிமுறைகளையும் கத்தார் விதித்தது. இருப்பினும் கால்பந்து ரசிகர்களுக்கான கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படவில்லை.
இந்தநிலையில், அர்ஜென்டினா ரசிகை மைதானத்திலேயே மேலாடையை கழற்றி கொண்டாடிய வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கத்தார் சட்டப்படி அந்த ரசிகை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
டாபிக்ஸ்