Praveen Kumar: உச்சகட்ட வேகத்தில் வந்து மோதிய வேன்..!காரில் மகனுடன் இருந்த முன்னாள் கிரிக்கெட்டர் பிரவீன் குமார் எஸ்கேப்
Jul 05, 2023, 12:46 PM IST
மீரட் அருகே நிகழ்ந்த சாலை விபத்திலிருந்து இந்திய அணியின் முன்னாள் மித வேகப்பந்து வீச்சாளரான பிரவீன் குமார் தப்பித்துள்ளார். அவரது கார் மீது வேன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில் மகனுடன் பயணித்த பிரவீன் குமார் தப்பித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரவீன் குமார் மீரட் அருகே சாலை விபத்தில் சிக்கியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாண்டவ் நகர் பகுதியிலிருந்து தனது மகனுடன் காரில் பயணித்துள்ள பிரவீன் குமார். அப்போது அந்த பகுதியில் வேன் ஒன்று பிரவீன் குமாரின் காரை நோக்கி வேகமாக வந்து மோதியுள்ளது.
இந்த விபத்தில் காரின் உள்ள இருந்த பிரவீன் குமார், அவரது மகனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவர் காரின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதன்பின்னர் காயங்களுக்கான அறுவை சிகிச்சை செய்த பின்னர் உயிர் பிழைத்திருக்கும் பண்ட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் புத்துணர்வு முகாமில் பங்கேற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு இந்திய வீரரான பிரவீன் குமார் சாலை விபத்தில் சிக்கி எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்துள்ளார்.
36 வயதாகும் பிரவீன் குமார் இந்தியாவுக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்து வகை போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரை இந்தியா முதல் முறையாக வென்றபோது, அணியின் முக்கிய பவுலராக இருந்தவர் பிரவீன் குமார். அதேபோல் ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி இவர் மொத்தம் 119 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பவுலராகவும், நீண்ட தூரம் சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் 124 மீட்டர் தூரம் சிக்ஸரை பறக்க விட்டு அந்த பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.
2018ஆம் ஆண்டில் அனைத்து வரை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார் பிரவீன் குமார். தற்போது லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக் உள்பட டி20 லீக் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்