England Playing XI: மீண்டும் வருகிறார் மொயீன் அலி-3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு
Jul 05, 2023, 05:46 PM IST
ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் நாளை ஹெட்டிங்லியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் விளையாடப்போகும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
காயம் காரணமாக ஒல்லி போப் ஆஷஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஏற்கனவே காயம் அடைந்திருந்த மொயீன் அலி, 2வது டெஸ்டில் விளையாடாமல் இருந்தார்.
இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த அவர், 3வது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
மொயின் அலியுடன் கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோரும் அணிக்குத் திரும்புகின்றனர்.
அதேநேரம், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஷ் டங் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.
மொயீன் அலி அணிக்கு திரும்பியிருப்பது இங்கிலாந்துக்கு கூடுதல் பலம். அவர் பேட்டிங், ஸ்பின் பவுலிங் இரண்டிலும் கலக்குவார்.
அதேபோல், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் பவுலிங்கில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்
ஜாக் கிராலி, பெஸ் டக்கெட், ஹாரி ப்ரூக், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்டு பிராட்.
2வது டெஸ்டில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் விளாசியும் அது வீணானது. இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
முதல் டெஸ்டிலும் அந்த அணியே வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது. அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா ஜெயித்துவிட்டால் ஆஷஸ் தொடரை கைப்பற்றிவிடும்.
எனவே, இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி விவேகமாக செயல்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இங்கிலாந்து அணியின் மூன்றாவது பேட்ஸ்மேனாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வரும் போப் விலகியுள்ள நிலையில் அணியில் சில தடாலடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பீல்டிங்கின்போது, ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் லபுசேன் அடித்த பந்தை டைவ் அடித்து பிடித்தபோது போப்புக்கு, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
தற்போது அவர் மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்