Thangarasu Natarajan: தோனி போல் இந்தியாவுக்காக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடராஜன் - தினேஷ் கார்த்தி பேச்சு
Jun 23, 2023, 02:29 PM IST
சர்வதேச தரத்தில் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் யார்க்கர் மன்னன் நடராஜன் கட்டியிருக்கும் மைதானத்தை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தி திறந்து வைத்துள்ளார்.
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான தங்கராசு நடராஜன், யார்க்கர் மன்னன் என ரசிகர்களால் அழைத்து வருகிறார்கள். 2021இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் நெட் பவுலராக சென்று பின்னர் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று சிறப்பாக விளையாடினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஐபிஎல் 2023 தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து தனது சொந்த ஊரில் நடராஜன் கிரிக்கெட் அகாடமி நடத்தி வரும் நடராஜன், கிராப்புறங்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது தனது அகாடமிக்கு சொந்தமாக சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இந்த கிரிக்கெட் மைதானத்துக்கு நடராஜன் கிரிக்கெட் மைதானம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், நடராஜனின் தாய், தந்தை முன்னிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மைதானத்தை திறந்து வைத்தார்.
இதன் பின்னர் பேசிய தினேஷ் கார்த்திக், " சின்ன கிராமத்தில் இருந்து வந்த கிரிக்கெட் விளையாடி வீரராக இருந்தவர் தோனி. அவ்வாறு கிரிக்கெட் விளையாடி பெரிய விஷயங்களை சாதிக்க முடியும் என நிருபித்தார்.
நடராஜனும் அதுபோல் சேலம் அருகே கிராம பகுதியில் இருந்து வந்து இந்தியாவுக்காக விளையாடி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்" என்றார்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயஷங்கர் உள்ளிட்டோரும், நடிகர்கள் யோகிபாபு, புகழ் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, சிஎஸ்கே அணி சிஇஓ காசி விஸ்வநாதன், டிஎன்பிஎல் தொடரில் நடராஜன் விளையாடு பால்சி திருச்சி அணி வீரர்கள் மற்றும் சின்னப்பம்பட்டி ஊர் மக்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், நடராஜன் இடம்பிடித்திருக்கும் பால்சி திருச்சி அணி அடுத்த போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்