TNPL Qualifier 2 Preview: பைனலுக்கு முன்னேறப்போகும் அடுத்த அணி எது?-இன்று குவாலிஃபையர் 2 ஆட்டம்
Jul 11, 2023, 05:29 PM IST
டி.என்.பி.எல் 2023 குவாலிஃபையர் 2ல் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் நாளை மோதுகின்றன.
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனின் குவாலிஃபையர் 2ல் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் நாளை திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன.
முன்னதாக, லீக் சுற்றின் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதில் பாய்ண்ட்ஸ் டேபிளில் முதலிரண்டு இடங்களில் இருந்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் 1ல் மோதினர்.
இதில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதால் தொடர்ச்சியாக 2வது முறை டி.என்.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வியுற்ற திண்டுக்கல் டிராகன்ஸிற்கு குவாலிஃபையர் 2ல் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
லீக் சுற்றின் முடிவில் முறையே 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிகளுக்கு இடையே சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டரில் நெல்லை ராயல் கிங்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று குவாலிஃபையர் 2க்கு முன்னேறியது. மிகவும் பரபரப்பாக சென்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் கடைசிப் பந்தில் வெற்றியைத் தவறவிட்ட சீகம் மதுரை பேந்தர்ஸ் தொடரிலிருந்து வெளியேறியது
குவாலிஃபையர் 1ல் தோல்வியுற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் எலிமினேட்டரில் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் இன்று திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள குவாலிஃபையர் 2ல் விளையாடவுள்ளன.
இவ்விரு அணிகளும் இதுவரை தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரைக் கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 12ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸிற்கு எதிராக மோதவுள்ளது
குவாலிஃபையர் 2க்கு முன்பாக திண்டுக்கல் டிராகன்ஸின் கேப்டன் பாபா இந்திரஜித் பேசுகையில், “முந்தையப் போட்டியில் அடைந்த தோல்வியை மறந்து எங்களுக்கு கிடைத்துள்ள இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற முயற்சிப்போம். நெல்லை அவர்களின் சொந்த மண்ணில் விளையாடுவது பலமாக இருந்தாலும் நாங்கள் இங்கு ஏற்கனவே எங்களது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
குவாலிஃபையர் 2க்கு முன்பாக நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் கே.பி அருண் கார்த்திக் பேசுகையில், “எலிமினேட்டரில் பெற்ற வெற்றி வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது அதோடு எங்கள் சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது கூடுதல் பலத்தை தந்துள்ளது. திண்டுக்கல் அணியை குறைத்து மதிப்பிட முடியாது ஏனெனில் அவர்கள் வசம் பல திறமையான அனுபவம் வாய்ந்த வீரர்கள் நிறைந்துள்ளனர். டி20 போட்டிகளைப் பொறுத்தவரை அன்றைய நாளில் யார் சிறப்பாக விளையாடுவார்களோ அந்த அணியே வெற்றி பெறும்". என்றார்.
டாபிக்ஸ்