HT Sports SPL: ‘2024-இல் சிஎஸ்கே கேப்டன், 2025-இல் இந்திய அணி கேப்டன்’-ட்ரெண்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட்!
Aug 02, 2023, 06:50 AM IST
Ruturaj Gaikwad: சிஎஸ்கே 5வது முறையாக சாம்பியன் ஆனதற்கு இவரது ரன் குவிப்பும் முக்கியக் காரணம் என்றால் அதை மறுக்க முடியாது.
சிஎஸ்கே அணியில் இடம்பிடித்து தொடக்க வீரராக சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ருதுராஜ் கெய்க்வாட். தொடக்க வீரர்கள் சரியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே அடுத்தடுத்த வரிசையில் களமிறங்கும் வீரர்கள் சிறப்பாக ரன் குவிப்பில் ஈடுபட முடியும்.
அந்தப் பணியைச் சிறப்பாக செய்தார் இந்த புனே இளைஞர். 2021இல் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார் ருதுராஜ். அதைத் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம்பிடித்தார்.
சிஎஸ்கேவில் இந்த சீசனில் 590 ரன்களை குவித்தார் ருதுராஜ் கெய்க்வாட். சிஎஸ்கே 5வது முறையாக சாம்பியன் ஆனதற்கு இவரது ரன் குவிப்பும் முக்கியக் காரணம் என்றால் அதை மறுக்க முடியாது.
சாம்பியன் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்க்காமல் போனால்தான் ஆச்சரியம்.
அவரை கேப்டனாக ஆக்கியது பிசிசிஐ. செப்டம்பர் 28ம் தேதி முதல், அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியை ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.
யஷஸ்வி, ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங் உள்ளிட்ட திறமையான இளம் படை இவருடைய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அயர்லாந்து சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
அந்த அணியை நீண்ட காலமாக காயத்தால் அவதிப்பட்டுவந்த பும்ரா வழிநடத்தவுள்ளார்.
காயம் காரணமாக விளையாடாமல் இருந்துவந்த பும்ரா, மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அந்த தொடருக்கு துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சீனியர் அணியின் கேப்டனாக பிரகாசமான வாய்ப்பு ருதுராஜ் கெய்க்வாடுக்கு இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
எம்.எஸ்.தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறும் போது அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று கேதர் ஜாதவ் ஏற்கனவே விருப்பம் தெரிந்திருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.
ஆம். அதுவும் சமூக வலைத்தளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது. ருதுராஜ் கெய்க்வாட்தான் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் என இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்துவிட்டனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று வருவார். பிறகு அடுத்த ஆண்டு சிஎஸ்கே கேப்டனாகிவிடுவார். 2025 இல் இந்தியா odi கேப்டனாகவும், 2027 இல் உலகக் கோப்பையின் கேப்டனாகவும் ருதுராஜ் இருப்பார் என ஒரு கிரிக்கெட் ரசிகர் கணித்திருக்கிறார்.
ஹர்திக் பாண்டியாவே தற்போதைய மாற்று கேப்டனாக இருந்து வருகிறார் எனும் போதும் ரசிகர்களின் கணிப்பு நிஜத்தில் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்