Chepauk Super Gillies: ப்ளே-ஆஃப் பந்தயத்தில் நம்பிக்கையோடு காத்திருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
Jul 02, 2023, 10:47 PM IST
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இந்த சீசன் லீக்கை நிறைவு செய்தது.
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற 2வது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் பால்சி திருச்சி அணியை வீழ்த்தி, இந்த சீஸனின் ப்ளேஆஃப்ஸ் பந்தயத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
முன்னதாக, டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஒரு கட்டத்தில் 73/6 என்று இக்கட்டான தருணத்திலிருந்த நிலையில் 7வது விக்கெட்டிற்கு ஆர் சிபி மற்றும் யூ சசிதேவின் அற்புதமான பார்ட்னர்ஷிப்பால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் அதிகபட்சமாக ஆர் சிபி 31 ரன்கள் எடுத்தார். பால்சி திருச்சியின் பெளலிங்கைப் பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்ய பால்சி திருச்சி அணிக்கு 130 ரன்கள் மட்டுமே தேவை என்ற சுலபமான இலக்கை நோக்கி அந்த அணி களமிறங்க, ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஹரீஷ் குமாரின் வேகத்தில் டி சரண் (0)ஆட்டமிழக்க பால்சி திருச்சி அதிர்ச்சிக்குள்ளானது. அதன் பின் கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ வெறும் 7 ரன்களில் பாபா அபரஜித் சுழலில் வெளியேற, ஆண்டனி தாஸ்(0) ரன் எதுவும் எடுக்காமல் அனுபவ வீரர் ராஹில் ஷாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பவர்ப்ளேவிற்குள்ளாக பால்சி திருச்சி 3 முக்கிய விக்கெட்களை இழந்தாலும் அந்த அணிக்கு நம்பிக்கைத் தரும் வகையில் டாரல் ஃபெராரியோ 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர மற்ற எந்த பேட்டரும் இந்தப் போட்டியில் தங்களின் பங்களிப்பை அளிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பால்சி திருச்சி ஒரு கட்டத்தில் 56 ரன்களுக்கு 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றிக்கான பாதையை நோக்கி பயணித்தது. ஆனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸின் சிலம்பரசனின் சுழலில் சிக்கி திருச்சி அணி அடுத்த 15 ரன்களில் 7 விக்கெட்களை பறிகொடுத்து 13.4 ஓவர்களில் 71 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சிலம்பரசன் மிகச்சிறப்பாக பந்துவீசி 3 ஓவர்களில் வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறினார். அதோடு தன் முதல் 5 விக்கெட் சாதனையை தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் நிகழ்த்திக் காட்டினார். இந்தப் போட்டியில் பால்சி திருச்சி அணி தங்களின் 9 விக்கெட்களை சேப்பாக் சூப்பர் கில்லீஸின் ஸ்பின்னர்களிடம் இழந்தது. மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் குறைந்தபட்ச ஸ்கோரையும் இந்தப் போட்டியில் பதிவு செய்தனர். இதுவரை இந்த சீஸனில் விளையாடிய 6 போட்டிகளிலும் பால்சி திருச்சி அணி தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது.
இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 58 ரன்கள் வித்தியாசத்தில் பால்சி திருச்சி அணியை வீழ்த்தி இந்த சீஸனின் ப்ளேஆஃப்ஸ் பந்தயத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. சீகம் மதுரை பேந்தர்ஸ் தங்களின் அடுத்தப் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸிடம் தோற்றால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ப்ளேஆஃப்ஸ் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற சிலம்பரசன் பேசுகையில், ”கேப்டன் ராஹில் ஷா என்னிடம் பந்தை முடிந்த அளவு திருப்பினால் உனக்கு விக்கெட் கிடைக்கும் என்று கூறினார். அது நிகழ்ந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இதுவரை 7 சீஸன்களில் விளையாடி முதன்முறையாக 5 விக்கெட் சாதனையை இந்தப் போட்டியில் நிகழ்த்தியுள்ளேன்” என்று கூறினார்.
தோல்விக்குப்பின் பால்சி திருச்சி அணி கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ பேசுகையில், “ பெளலிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் தொடர்ச்சியாக விக்கெட்களை விடுவதால் அது தோல்விக்கு வழிவகுக்கிறது. எந்த பேட்டரும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிலைத்து நின்று விளையாடததால் எங்களால் வெற்றியைப் பெற முடியவில்லை. எதிர்காலத்தில் இந்த தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ள முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.
வெற்றிக்குப்பின் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் ராஹில் ஷா பேசுகையில், “உண்மையில், நாங்கள் 30-40 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என்று நினைத்தேன். ஏனென்றால் இது பேட்டிங்கிற்கு ஏற்ற வகையில் இருப்பதாக நாங்கள் எண்ணினோம். ஆனால் பந்து இந்தளவிற்கு திரும்பும் என்று நினைக்கவில்லை எங்கள் அணியில் சிறப்பான ஸ்பின்னர்கள் இருந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது”, என்று கூறினார்.
டாபிக்ஸ்