HBD Caroline Wozniacki: கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் டென்மார்க் டென்னிஸ் வீராங்கனை!
Jul 11, 2023, 05:37 PM IST
பிரெஞ்ச் ஓபன் ஜூனியர் இரட்டையர் பிரிவிலும் இறுதிச் சுற்று வரை முன்னேறினார். இறுதியில், விம்பிள்டன் ஜூனியர் ஒற்றையர் பிரிவில் சாம்பியனாகி தனது திறமையை நிரூபித்தார்.
கரோலின் வோஸ்னியாக்கி, டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் 1990-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பிறந்தார். அவருக்கு இன்று பிறந்த நாள். தந்தை பியோட்டர் கால்பந்து வீரர். தாயார் கைப்பந்து வீராங்கனை. போலந்து நாட்டைச் சேர்ந்த இருவரும், பின்னர், டென்மார்க்குக்கு குடிபெயர்ந்தனர்.
குடும்பத்தில் அனைவரும் விளையாட்டுத் துறையில் இருந்ததால், வோஸ்னியாக்கிக்கு இயல்பாகவே விளையாட்டின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது.
7 வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். ஆட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்து அவரது தந்தை ஊக்கப்படுத்தினார். 9-ஆவது வயதில் உருவெடுத்தார் சிறந்த வீராங்கனையானார் வோஸ்னியாக்கி.
சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் சார்பில் ஜூனியர் பிரிவில் நடத்தப்பட்ட போட்டிகளில் 15-ஆவது வயதில் பங்கெடுக்கத் தொடங்கினார் வோஸ்னியாக்கி.
அதற்கு அடுத்த ஆண்டே ஆஸ்திரேலியன் ஓபன் ஜூனியர் பிரிவில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் ஜூனியர் இரட்டையர் பிரிவிலும் இறுதிச் சுற்று வரை முன்னேறினார். இறுதியில், விம்பிள்டன் ஜூனியர் ஒற்றையர் பிரிவில் சாம்பியனாகி தனது திறமையை நிரூபித்தார்.
அந்த 2006-ஆம் ஆண்டு, தான் ஒரு தொழில்முறை வீராங்கனை என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பும் வோஸ்னியாக்கிக்கு அமைந்தது. 17 வயதில் சர்வதேச தரவரிசையில் 64-ஆவது இடம்பிடித்த வோஸ்னியாக்கி, 2008-இல் 12-ஆவது இடத்துக்கு முன்னேறி அசுர வளர்ச்சி அடைந்திருந்தார். அடுத்ததாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு இலக்கு நிர்ணயித்த வோஸ்னியாக்கி, அதற்காக தீவிர பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
2009 விம்பிள்டனில் 4-ஆவது சுற்று வரையும், அதே ஆண்டு அமெரிக்க ஓபனில் இறுதிச்சுற்று வரையும் முன்னேறினார். ஆனால், கிராண்ட்ஸ்லாம் கனவு, கனவாகவே நீடித்தது. அதே நேரம், தரவரிசையில் 4-ஆவது இடத்துக்கு முன்னேறி 'டாப் 5' வீராங்கனைகள் வரிசையில் இடம்பிடித்தார்.
2010-ஆம் ஆண்டில் டபிள்யூடிஏ போட்டிகளில் 6 பட்டங்களை வென்று ஆண்டின் இறுதியில் தரவரிசையில் முதல் முறையாக முதலிடத்துக்கு வந்தார் வோஸ்னியாக்கி.
அந்த இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் 67 வாரங்கள் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டார் வோஸ்னியாக்கி.
பிறகு, 2012-13 காலகட்டத்தில் சரிவைச் சந்தித்தார். கிராண்ட்ஸ்லாம் கனவும் தள்ளிப்போனது.
2014-ஆம் ஆண்டு முதல் மீண்டும் பழைய ஆட்டத்திறனுக்கு திரும்பினார். டென்னிஸ் உலகம் அவரை உற்று நோக்க ஆரம்பித்தது. அந்த ஆண்டு விம்பிள்டனில் 4-ஆவது சுற்று வரை சென்றதுடன், அமெரிக்க ஓபனில் மீண்டும் இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.
ஓய்வு நேரங்களில் புது மொழிகளைக் கற்றுக்கொண்டார். ஃபேஷன் ஷோக்களில் ஆர்வம் காட்டினார். ஆனால், டென்னிஸில் இருந்து மட்டும் அவர் கவனம் சிதறவில்லை. ஆண்டுகள் உருண்டோடின. முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூடிஏ ஃபைனலில் 2017-ஆம் ஆண்டில் சாம்பியனானார்.
2018இல் கிராண்ட்ஸ்லாம் வென்றே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் ஆஸ்திரேலியன் ஓபனில் பங்கேற்றார்.
இறுதிச்சுற்றில், ஹேலப்பை போராடி வென்றார். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் வென்ற டென்மார்க் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.
டாபிக்ஸ்