BWF World Championships 2023: அரையிறுதியில் தோல்வி! வெண்கலத்துடன் வெளியேறிய பிரனாய்
Aug 27, 2023, 10:19 AM IST
பிடபிள்யூஎஃப் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதியில் தோல்வியுற்றபோதிலும் முதல் முறையாக பதக்கம் வென்றுள்ள இந்திய நட்சத்திர வீரரான எஸ்எஸ் பிரனாய்.
டென்மார்க்கில் நடைபெற்று வரும் 28வது பிடபிள்யூஎஃப் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கத்தை நோக்கிய எச்எஸ் பிரனாய் பயணம் முடிவிக்கு வந்துள்ளது. இந்த தொடரின் ஒற்றையர் பிரிவு போட்டியில் நடப்பு உலக சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்செனை காலிறுதி போட்டியில் வீழ்த்தி தனக்கான பதக்கத்தை உறுதி செய்தார் பிரனாய்
இதையடுத்து அரையிறுதி போட்டியில் உலக தரவரிசையில் மூன்றாம் இடத்தை பிடித்தவரும், பலம் வாய்ந்த வீரருமான தாய்லாந்து நாட்டை சேர்ந்த குன்லவுட் விடிசார்ன் என்பவரை எதிர்கொண்டார். இந்த போட்டியின் முதல் சுற்றில் ஆரம்பத்தில் இருந்த ஆதிக்கம் செலுத்தி வந்தார் பிரனாய். இதன் விளைவாக 21-18 என்ற கணக்கில் முதல் சுற்றை கைப்பற்றினார்.
ஆனால் இரண்டாவது சுற்றில் விஸ்வரூபம் எடுத்த தாய்லாந்து வீரர் விடிசார்ன் பிரனாய் ஆட்டத்தை கட்டுப்படுத்தினார். அத்துடன் தனது ஆட்டத்தையும் மேம்படுத்தி புள்ளிகளை பெற்றார். இதைத்தொடர்ந்து இரண்டாவது செட்டில் 21-13 என்ற கணக்கில் விடிசார்ன் வென்றார்.
வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்றில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியபோதிலும், விடிசார்ன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
அரையிறுதியில் தோல்வி அடைந்த பிரனாய், வெண்கல கோப்பையுடன் வெளியேறினார். பிடபிள்யூஎஃப் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பிரனாய் பெறும் முதல் கோப்பையாக இது அமைந்துள்ளது. அத்துடன் இந்தியாவுக்காக இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற 5வது வீரர் என்ற பெருமையை பெறுகிறார் பிரனாய்.
இதற்கு முன்னர் இந்த தொடரில் இந்திய வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி, லக்ஷயா சென் வெண்கலம், சாய் பிரணீத் வெண்கலம், பிரகாஷ் படுகோன் வெண்கலம் ஆகியோர் பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களின் லிஸ்டில் தற்போது பிரனாய் இணைந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்