HT Sports Special: அறிமுக டெஸ்டில் சதம் - சென்னையில் இருந்து இந்திய அணிக்காக விளையாடிய சீக்கியர்
Aug 11, 2023, 10:51 PM IST
டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த இந்திய வீரர்களில் ஒருவராக இருப்பவர் கிரிபால் சிங். சென்னையில் செட்டிலான சீக்கியரான இவரது குடும்பமே ஒரு கிரிக்கெட் குடும்பமாக உள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில் 1955 முதல் 1965 வரை விளையாடியவர் ஏஜி கிரிபால் சிங். சென்னையில் செட்டிலாகியிருந்த இவரது குடும்பம் கிரிக்கெட் குடும்பம் என்றே அழைக்கப்பட்டது. கிரிபால் சிங் தந்தை ராம் சிங் துர்தர்ஷ்டவசமாக இந்திய அணிக்கு விளையாட முடியாமல் போனது. அவரது சகோதரர் மில்கா சிங் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவரது இன்னொரு சகோதரர், இரண்டு மகன்கள், மகள், உறவினர் என இந்தியாவின் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். அட்டாக், ஸ்டோர்க் என இரண்டு வகையிலும் பேட் செய்யக்கூடியவராக இருந்த கிரிபால் சிங், அணிக்கு தேவைப்படும் நேரத்தில் பங்களிப்பு அளிக்கும் ஆஃப் ஸ்பின் பவுலராகவும் இருந்துள்ளார்.
ராஞ்சி கோப்பை 1954-55 சீசனை மெட்ராஸ் (சென்னை) அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கிரிபால் சிங். இவர் அந்த சீசனில் 106.00 சராசரியுடன், 636 ரன்களுடன், 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த சீசனில் தான் அ்வரது கிரிக்கெட் கேரியரில் சிறந்த ஸ்கோரான 208 ரன்கள் திருவான்கூர்-கொச்சின் அணிக்கு எதிராக எடுத்தார்.
இவரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற கிரிபால் சிங், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை புரிந்தார். 100 ரன்கள் எடுத்து நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். சர்ப்ரைசாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுதான் அவரது கடைசி சதமாகவும் அமைந்தது. இதன் பிறகு அவர் இரண்டு அரை சதம் மட்டுமே அடித்தார்.
மொத்தம் 14 டெஸ்ட் போட்டிகள் விளையாடி ஒரு சதம், இரண்டு அரை சதம் என மொத்தம் 422 ரன்கள் கிரிபால் சிங் எடுத்துள்ளார். 1959இல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளூர் அணியான லங்காஷயர் அணிக்கு எதிராக 178 ரன்கள் அடித்து கவனத்தை ஈர்த்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 41 ரன்கள் எடுத்த அவருக்கு, கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அணிக்கு வருவதும் போவதுமாக இருந்ததால் கன்சிஸ்டன்டான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இருந்துள்ளார்.
1963-64 சீசனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அணியின் முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறினார். இதையடுத்து இங்கிலாந்து அணிக்காக மாற்று வீரராக களமிறக்கப்பட்ட கிரிபால் சிங் பீல்டிங்கிலும் ஈடுபட்டார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவு சமயத்தில் தமிழ்நாடு அணிக்காகவும், துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு மண்டல அணிக்காகவும் கேப்டனாக செயல்பட்டார்.
சீக்கியரான இவர், டெஸ்ட் போட்டிகள் விளையாடிய காலகட்டத்தில் கிறிஸ்தவ பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்காக தனது மத சடங்குகளை மீறி தலைமுடியை கட்டிங் செய்து, தாடியை நீக்கினார்.
1987ஆம் ஆண்டில் மாரடைப்பு ஏற்பட்டு கிரிபால் சிங் உயிரிழந்தார். இறக்கும்போது அவர் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தார்.
சென்னையில் இருந்து இந்திய அணிக்காக விளையாடிய சீக்கியர் என்ற பெருமைக்கு உரியவராக திகழும் கிரிபால் சிங் 90வது பிறந்தநாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்