தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Nellai Royal Kings: நெல்லை ராயல் கிங்ஸ் 5வது வெற்றி-ஆறுதல் வெற்றி கூட பெறாத திருச்சி

Nellai Royal Kings: நெல்லை ராயல் கிங்ஸ் 5வது வெற்றி-ஆறுதல் வெற்றி கூட பெறாத திருச்சி

Manigandan K T HT Tamil

Jul 05, 2023, 11:41 PM IST

google News
TNPL: டிஎன்பிஎல் 2023 கடைசி லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி பெற்றது. (TNPL)
TNPL: டிஎன்பிஎல் 2023 கடைசி லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி பெற்றது.

TNPL: டிஎன்பிஎல் 2023 கடைசி லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி பெற்றது.

டிஎன்பிஎல் 2023 சீசனில் கடைசி லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி அணியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, மழை காரணமாக டிஎல்எஸ் முறைப்படி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கும் குறைக்கப்பட்டது. டார்கெட் 130 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

முதல் இன்னிங்ஸ் தொடங்கியபோதும் மழை காரணமாக 19 ஓவர்கள் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் முதலில் விளையாடிய திருச்சி 19 ஓவர்களில் 147 ரன்களை எடுத்தது. பின்னர் மழை காரணமாக 130 ஆக டார்கெட் நிர்ணயிக்கப்பட்டது.

டார்கெட்டை சேஸ் செய்த நெல்லை எளிதில் எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியின் அஜிதேஷ் சிறப்பாக விளையாடி அரை சதம் பதிவு செய்தார்.

கேப்டன் அருண் கார்த்திக் 13 ரன்களிலும், லஷ்மண் சூர்யபிரகாஷ் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த அஜிதேஷ், நிதிஷ் ஆகியோர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை ஜெயிக்க வைத்தார். அஜிதேஷ் 56 ரன்களிலும், நிதிஷ் 35 ரன்களும் எடுத்தனர்.

திருச்சி அணி சார்பில் ஈஸ்வரன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த சீசனில் திருச்சி ஓர் ஆட்டத்தில் கூட்டத்தில் வெல்லவில்லை.

நெல்லை அணிக்கு இது 5 வது வெற்றியாகும். நெல்லை அணி எலிமினேட்டர் சுற்றில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை வரும் சனிக்கிழமை சேலத்தில் எதிர்கொள்கிறது.

மழையின் காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியைத் தேடி களமிறங்கிய பால்சி திருச்சி மீண்டும் ஒரு மோசமான தொடக்கத்தைப் பெற்றது.

அவர்களின் தொடக்க வீரர் கே ராஜ்குமார்(2) விக்கெட்டை சந்தீப் வாரியர் கைப்பற்ற அடுத்து வந்த டி சரண்(0) ரன் எதுவும் எடுக்காமல் சோனு யாதவிடம் இழந்து வெளியேறினார். பவர்ப்ளே முடிவில் வெறும் 27 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து பால்சி திருச்சி மோசமான நிலையிலிருந்த போது திடீரென மழைக் குறுக்கிட ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது

மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்ட போது ஒரு ஓவர் குறைவாக 19வது ஓவர் போட்டியாக ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டது. பால்சி திருச்சியின் கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூவுடன் இணைந்து ஜாஃபர் ஜமால் அதிரடியாக விளையாடி அணியின் ரன் கணக்கை வேக உயர்த்தினார். அனுபவ வீரர் பொய்யாமொழியின் பந்துவீச்சில் கங்கா ஸ்ரீதர் ராஜூ(18) தனது விக்கெட்டை இழந்தாலும் ஜாஃபர் ஜமால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தன் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார்.

பால்சி திருச்சி அணிக்காக 5வது விக்கெட்டிற்கு ஜாஃபர் ஜமால் மற்றும் டாரல் ஃபெராரியோ இணைந்து 67 ரன்கள் சேர்த்தனர். அவர்களின் பார்ட்னர்ஷிப்பால் பால்சி திருச்சியின் ஸ்கோர் கணக்கு மளமளவென உயர்ந்தது. குறிப்பாக, ஜாஃபர் ஜமால் திருநெல்வேலியில் சிக்ஸர் மழைப் பொழிய அரங்கிலிருந்த அனைத்து ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். தனது இன்னிங்ஸில் ஜாஃபர் ஜமால் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசி 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.

கடைசி ஓவரில் ஆண்டனி தாஸ் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க, பால்சி திருச்சி இறுதியில் 19 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது. அந்த அணிக்கு தனி ஒருவனாக போராடி ஜாஃபர் ஜமால் 96 ரன்களைக் குவித்தார். நெல்லை ராயல் கிங்ஸின் பெளலிங்கைப் பொறுத்தவரை பொய்யாமொழி 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி