Asian Games 2023: டென்னிஸில் இந்தியாவுக்கு வெள்ளி! இரட்டையர் பிரிவில் ஷாகித் மைநேனி - ராம்குமார் ராமநாதன் கலக்கல்
Sep 29, 2023, 10:50 AM IST
ஆசிய விளையாட்டில் ஆண்களுக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாக இது அமைந்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவிலுள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளின் ஆறாவது நாளான இன்று இந்தியாவுக்கு ஆண்களுக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
இந்தியாவின் ஷாகித் மைநேனி - ராம்குமார் ராமநாதன் இணை, சீனா தைபேவை சேர்ந்த ஜங் ஜேசன் - ஷு யூ ஷியோ ஜோடியுடனான இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வீழ்ந்தது.
ஆரம்பம் முதலே நெருக்கடி தரும் விதமாக இந்திய ஜோடி விளையாடியபோதிலும் அதை சிறப்பாக சமாளித்து சீனா ஜோடி வெற்றி பெற்றது. இந்தப் போட்டி ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் வரை நீடித்தது. இதையடுத்து இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க பட்டியல் 29 என உயர்ந்துள்ளது.
தற்போது வரை 7 தங்கம், 10 வெள்ளி, 11 வெண்கல பதக்கங்களை இந்திய வென்று பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக, டென்னில் ஒற்றையர் பிரிவில் தகுதி சுற்றிலேயே இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் பதக்கங்கள் ஏதும் இல்லாமல் வெளியேறியது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2006க்கு பிறகு முதல் முறையாக நட்சத்திர வீரர் சுமித் நாகல், கடந்த முறை வெண்கலம் வென்ற அங்கித் ரெய்னா ஆகியோர் காலிறுதி வரை தகுதி பெற்று தோல்வியுடன் வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து டென்னிஸ் விளையாட்டில் இரட்டையர் பிரிவில் தற்போது இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. ஒற்றையர் பிரிவில் விளையாடிய ராம்குமார் ராமநாதன் தோல்வியுடன் வெளியேறினாலும், இரட்டையர் பிரிவில் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிகளில் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாக இது அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்