Asian Games 2023: குறி வைத்து தூக்கும் இந்தியா - துப்பாக்கி சுடுதலில் ஒரே நாளில் நான்கு பதக்கங்கள்
Sep 29, 2023, 11:53 AM IST
ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது. அத்துடன் இன்று ஒரே நாளில் மட்டும் துப்பாக்கி சுடுதலில் நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளான இன்று இந்தியாவுக்கு டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.
இந்திய இளம் வீராங்கனையான பாலக், ஈஷா சிங் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர். ஆசிய விளையாட்டில் இந்த முறை துப்பாக்கி சுடுதலில் இந்திய பதக்கங்களை அள்ளி வருகிறது.
17 வயதாகும் பாலக், இறுதிப்போட்டியில் 242.1 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ஈஷா 239. 7 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். அத்துடன் ஈஷா இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பெறும் நான்காவது பதக்கமாக இது அமைந்தது.
ஏற்கனவே, அணி சார்பில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளி, 25மீ பிஸ்டல் பிரிவில் தங்கம், 25மீ பிரிவில் தனிப்பட்ட வீராங்கனையாக போட்டியிட்டு தங்கம் என மூன்று பதக்கங்களை வென்றிருந்தார். இதையடுத்து தற்போது தனிப்பட்ட பிரிவில் 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.
இதேபோல் ஆண்களுக்கான ரைபிள் மூன்று வீரர்கள் கொண்ட ரைபிள் போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் குசலே மற்றும் அகில் ஷியோரன் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். இவர்கள் மூவரும் இணைந்து 1769 புள்ளிகளை பெற்று உலக சாதனை புரிந்துள்ளனர்.
பெண்கள் பிரிவிலும் அணி விளையாட்டில் இந்தியாவின் ஈஷா சிங், பாலக், திவ்யா தடிகோல் சுப்புராஜு ஆகியோர் 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் வெள்ளி வென்றுள்ளனர். இவர்களு மூவரும் இணைந்து 1731 புள்ளிகளை பெற்றனர்.
ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் குறி பார்த்த பதக்கங்களை அள்ளி வருகிறது இந்தியா. இன்று ஒரு நாளில் மட்டும் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி என நான்கு பதக்கங்களை அள்ளியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியவின் பதக்க பட்டியல் 31ஆக உயர்ந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்