Asia cup 2022: நான்காவது முறையாக ஆசிய கோப்பை விளையாடும் ஹாங்காங் அணியின் பின்னணி
Aug 25, 2022, 11:16 PM IST
ஆசிய கோப்பை தகுதி சுற்றில் மூன்று வெற்றிகளுடன் ஹாங்காங் நான்காவது முறையாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அதுவும் இந்த முறை வலுவான இந்திய, பாகிஸ்தான் அணிகள் இடம்பெறும் குரூப்பில் மூன்றாவது அணியாக இணைந்துள்ளது.
ஆசிய கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளடன் தகுதி சுற்றில் தேர்வாகும் அணி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஆசிய கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், சிங்கப்பூர், குவைத் ஆகிய நான்கு அணிகள் பலப்பரிட்சை செய்தன. இதில் 3 வெற்றிகளை பெற்ற ஹாங்காங் அணி ஆசிய கோப்பையில் விளையாட தகுதி பெற்றது. இதன் மூலம் 2004, 2008, 2018 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக தொடரில் விளையாடவுள்ளது. இதுவரை விளையாடிய மூன்று முறையும் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது.
1969 முதல் ஐசிசி உறுப்பினராக இருந்து வரும் ஹாங்காங் அணி 50 ஆண்டுகளுக்கும் மேலாக கத்துக்குட்டி அணியாகவே இருந்து வருகிறது. முதல் முறையாக சர்வதேச ஒருநாள் போட்டியை வாங்கதேசத்துக்கு எதிராக 2004ஆம் ஆண்டிலேயே விளையாடும் வாய்ப்பை பெற்றது. இதுவரை 26 சரவதேச ஒரு நாள் போட்டிகளை விளையாடியுள்ள ஹாங்காங் அணி 9 வெற்றியும், 16 தோல்வியும் பெற்றுள்ளது. 1 போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை.
அதேபோல் இரண்டு முறை டி20 உலகக் கோப்பை விளையாடும் வாய்ப்பை பெற்ற ஹாங்காங் அணி முறையே 15, 16 ஆகிய இடங்களை பிடித்தது. தொடர்ச்சியாக ஐசிசி குவாலிபயர் போட்டிகளில் தவறாமல் இடம்பெறும் அணியாக இருந்து வரும் ஹாங்காங் அவ்வப்போது இதுபோல் சர்ப்ரைஸ் கொடுத்து சர்வதேச அணிகளுடன் மல்லுக்கு நிற்கும் வாய்ப்பையும் பெற்று வருகிறது.
கத்துகுட்டி அணிகள் ஒரு முறையேனும் டாப் அணிகளை அப்செட் செய்துவிட்டுதான் உலக அளவில் பேமஸ் ஆனது என்கிற காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வரலாறு ஹாங்காங் அணிக்கு விதிவிலக்காக இல்லை. அப்பயொரு சம்பவத்தை ஹாங்காங் அணி இதுவரை செய்ததில்லை. இந்த முறை வலுவான அணிகளான இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடம்பிடித்துள்ள குரூப்பில் இடம்பிடித்துள்ளது.
ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டி ஆப்கானிஸ்தான் - இலங்கை இடையே துபாயில் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.