Asia cup 2022: இலங்கையை எளிதாக வீழ்த்திய ஆப்கானிஸ்தான்!
Aug 28, 2022, 12:44 AM IST
முதலில் பெளலிங், பின் பேட்டிங்கில் ஆப்கானிஸ்தான் ருத்ரதாண்டவம் காட்ட இலங்கை முழுமையான சரண்டர் ஆனது. இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான முதல் வெற்றியை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி குரூப் பி பிரிவில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த தோல்வியால் தற்போது இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2022 தொடரின் முதல் போட்டி இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையே துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதற்கு வலு சேர்க்கும் விதமாக இலங்கையின் டாப் ஆர்டரை முதல் 2 ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்தது ஆப்கானிஸ்தான் அணி.
இலங்கை அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி ஆரம்பத்திலேயே தலைவலி கொடுத்தார் ஆப்கானிஸ்தான் பெளலர் ஃபசல்ஹக் பாரூக்கி. இவர்தான் வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மேன்ஆப் தி மேட்ச் விருதையும் தட்டிச் சென்றார்.
5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த இலங்கை அணி மெதுவாக மீட்டெடுத்தனர் தனுஷ்க குணதிலக - பனுக்கா ராஜபக்ஷ ஜோடி. அணியின் ஸ்கோர் 49 இருக்கும்போது குணதிலக 17 ரன்களில் வெளியேறினார். அவர் வெளியேறிய பிறகு மறுபடியும் ஒரு சறுக்கல். 70 ரன்களை கூட கடக்க முடியாமல் 8 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி.
பனுக்கா ராஜபக்ஷ சிறப்பாக பேட் செய்தபோதிலும், 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்தான் அணியின் அதிகபட்ச ஸ்கோராகவும் அடித்திருந்தார். 75 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, கடைசி நேரத்தில் சாமிக்க கருணாரத்னவின் ஆட்டத்தால் இலங்கை அணி 100 ரன்களை கடந்தது. இறுதியில் 19.4 ஓவரில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
106 என்கிற எளிய சேஸை விரட்ட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள், தங்கள் அணியின் பெளலர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என சொல்லும் விதமாக தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டினர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரஹ்மானுல்லா குர்பாஸ் வெறும் 18 பந்துகளில் 40 ரன்கள் அடித்த அணியின் ஸ்கோரை பவர் ப்ளே ஓவர் முடிவில் 83 என உயர்த்திவிட்டு பெவிலியின் திரும்பினார்.
இறுதியில் 10.1 ஓவர் முடிவில் ஆப்கானிதான் அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றது.
இலங்கை அணிக்கு எதிராக இரண்டாவது முறையாக டி20 போட்டிகளில் விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை அணி அந்தப் போட்டியில் கட்டாயமாக, நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற்று ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.